×

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நடமாடும் வழிகாட்டுதல் மையம்: கலெக்டர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ISM (https://labour.tn.gov.in/ism), eSHRAM மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் ஆகிய இணையதளங்களில் பதிவு செய்யும் வகையிலும் தயாரிக்கப்பட்ட நடமாடும் வழிகாட்டுதல் மையம் துவக்க விழா நடைபெற்றது.

தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ச.சுதா தலைமை தாங்கினார். ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் பி.ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நடமாடும் வழிகாட்டுதல் மையத்தை நேரில் பார்வையிட்டு, கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ உதவி, தாய் சேய் பராமரிப்பு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் பெறலாம். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதற்கு அருகாமையிலுள்ள அங்கன்வாடியையும், தடையின்றி பள்ளி கல்வியை பெறுவதற்கு அருகாமையிலுள்ள பள்ளியையும் அணுகலாம்.

அருகாமையிலுள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் ரேஷன் அட்டை, டிஜி லாக்கர்ஸ் மூலம் எண்ணை குறிப்பிட்டு குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் மொபைல் இணைத்தல், இ.ஷரம் மற்றும் ஐ.எஸ்.எம் போர்ட்டலில் பதிவு செய்தல் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு குறிப்பிட்டுள்ள உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அரசு வழங்கும் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுட் காப்பீடு திட்டங்களில் சேர்ந்து பயனடையலாம்.

டிஜிட்டல் லாக்கா சான்றிதழ்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளலாம். இ.ஷரம்-ல் பதிவு செய்வதினால் அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களை பெறலாம். தொழிலாளர் உரிமையை நல்ல முறையில் பாதுகாத்து கொள்ளலாம், 60 வயது பூர்த்தியடைந்த பிறகு மாதம் ரூ.3 ஆயிரம் பென்சன் பெறலாம். இறப்பு நேரிட்டால் ரூ.2 இலட்சம் நிதியுதவியும், ஏதேனும் ஊனம் ஏற்பட்டால் ரூ. 1 இலட்சம் நிதியுதவியும் என இ.ஷரம்-ல் பதிவு செய்வதினால் பல்வேறு நன்மைகள் பெறலாம்.

வெளிமாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இணையத்தில் பதிவு செய்வதினால் அரசாங்கம் வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும், பேரிடர் காலங்களில் நிவாரணம் மற்றும் சொந்த ஊருக்கு திரும்ப உதவியாக இருக்கும், தமிழ்நாடு கட்டுமான நலவாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதினால் கல்வி உதவித்தொகை 6 ம் வகுப்பு முதல் மேற்படிப்பு வரை பெறலாம். திருமண உதவித் தொகை ரூ.20 ஆயிரம் பெறலாம், 60 வயது பூர்த்தியடைந்த ரூ.1000 பென்சன் பெறலாம். வீடு கட்ட ரூ.5 இலட்சம் பெறலாம், இயற்கை மரணம் நேரிட்டால் ரூ.50 ஆயிரம் பெறலாம், விபத்து மரண நேரிட்டால் ரூ. 1 இலட்சம் என இதுபோன்ற நன்மைகள் பெறலாம்.

உதவிக்கு தொழிலாளர்களுக்கான இலவச தொலைபேசி எண் : 1800 4252 650, திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாடு அறை, தொழிலாளர் துறை : 044 – 27667117, சைல்டு லைன் குழந்தைகளுக்கான உதவி எண் : 1098, பெண்களுக்கான உதவி எண் : 1091 மற்றும் 181 ஆகிய எண்களை உதவிக்காக தொடர்பு கொள்ளலாம். எனவே, நமது மாநில மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை நலனை பாதுகாக்கவும், கொத்தடிமை இல்லாத திருவள்ளூர் மாவட்டமாகவும் உருவாக்க உறுதி செய்வோம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இதில், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நடமாடும் வழிகாட்டுதல் மையம்: கலெக்டர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mobile Orientation Center for Migrant Labourers ,Thiruvallur ,District Administration ,Labor Welfare Department ,IRCTS ,District ,Collector ,Mobile Guidance Center for Migrant Workers ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்