×

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். தை பிரம்மோற்சவத்திற்கு பிறகு சைத்ர பிரமோற்சவம் எனும் சித்திரை பிரமோற்சவம் நாளை மறுநாள் (26ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் ஸ்ரீவீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதன்படி 26ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றமும், 6 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும், 9.30 மணிக்கு பக்தி உலாவும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

27ம் தேதி காலை ஹம்சவாகனத்தில் 5 மணிக்கு வீதி புறப்பாடும், 8 மணிக்கு பக்தி உலாவும், 9.30 மணிக்கு திருமஞ்சனமும் இரவு 7 மணிக்கு சூர்ய பிரபை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 28ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கருட சேவையும், கோபுர தரிசனமும், மாலை 5.30 மணிக்கு திருவீதி புறப்பாடும், 7.30 மணிக்கு ஹனுமந்த வாஹனம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலமும், இரவு 7 மணிக்கு சந்திரபிரபை வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 30 ந் தேதி காலை 4 மணிக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலை 7 மணிக்கு யாளி வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மே 1ம் தேதி அதிகாலை 5 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலமும், சூர்ணாபிஷேகமும் மாலை 5 மணிக்கு வெள்ளி சப்பரமும், இரவு 7 மணிக்கு யானை வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் 2ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4.45 மணிக்கு திருத்தேருக்கு பெருமாள் எழுந்தருளுதலும், 7.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடும், இரவு 9.30 மணிக்கு கோயிலுக்கு பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 3ம் தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு திருப்பாதம் சாடி திருமஞ்சனமும் 7.30 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 4ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆள்மேல் பல்லக்கும், 10.30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு விஜயகோடி விமான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 5ம் தேதி காலை 9 மணிக்கு த்வாதசாராதனமும், இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கும், 11.30 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

The post திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur Weeraragava Perumal Temple Chitrai Pramotsavam ,Thiruvallur ,Sri Vaidya Veeraragawa Perumal Temple ,Tiruvallur ,Tiruvallur Veeraragawa Perumal Temple Chitrai Promotsavam ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்