×

விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சைப்பயிறு கொள்முதல் செய்யும் திட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக பருப்பு வகைகள் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடனும் விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச விலை ஆதரவு திட்டத்தின்கீழ் பச்சைப்பயிறு கொள்முதல் செய்யும் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ், துணை இயக்குநர் ரா.சீனிராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, நகர மன்ற துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், காஞ்சிபுரம் விற்பனை குழு செயலாளர் இரா.சேரலாதன் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி, பச்சைப்பயிறு கொள்முதல் செய்யும் திட்டத்தை துவக்கி வைத்து, பேசியதாவது : தமிழ்நாடு அரசு பயறுவகை சாகுபடியை ஊக்குவித்து பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்தும், விவசாயகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும், தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ராபிப் பருவத்தில் பச்சைப்பயறு தனிப்பயிராக 9250 எக்டேர் பரப்பிலும், நெல் தரிசில் பயறுவகை சாகுபடி திட்டத்தின் கீழ் 850 எக்டேர் பரப்பிலும் என மொத்தம் 10 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அதற்கான அறுவடையானது தற்போது துவங்கியுள்ளது.

கடந்த ஆண்டு குறைந்தபட்ச விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் ஒரு ஹெக்டருக்கு 257 கிலோ விதம் 675.65 மெ.டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் பச்சைப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தரகுறியீட்டின்படி கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் கிலோ ஒன்றுக்கு ரூ.4.80 வீதம் உயர்த்தப்பட்டு ரூ.77.55 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனமான தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் விவசாயிகளிடமிருந்து பச்சைப்பயறு கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பச்சைப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் அனைவரிடமும் விடுபாடின்றி கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகம் எடுத்த துரித முயற்சியின் காரணமாக கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யவும், ஒரு ஹெக்டருக்கு 384 கிலோ பச்சைப்பயறு வீதம் 1200 மெட்ரிக் டன் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பச்சைப்பயறு கொள்முதலுக்கான தொகை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 29.05.2023 க்குள் தங்களின் ஆதார் எண், வங்கிக் கணக்குப் புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்யுமாறும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்க இத்திட்டத்தில் விவசாயிகள் முழுமையாக பங்குபெற்று பயன்பெறுமாறும், கூடுதல் விபரங்களுக்கு செயலாளர் காஞ்சிபுரம் விற்பனைக்குழு, மேற்பார்வையாளர்கள் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஆகியோரை விவசாயிகள் அணுகுமாறும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச விலை ஆதரவு திட்டத்தின் கீழ் பச்சைப்பயிறு கொள்முதல் செய்யும் திட்டத்துவக்க விழாவில் 3 விவசாயிகளுக்கு நெல் விளைபொருளுக்காக ரூ.5.10 இலட்சம் மதிப்பீட்டில் பொருளீட்டுக்கடன் பெற்றதற்கான ஆணைகள் மற்றும் காசோலைகளையும் 3 உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வழங்கப்படுவதற்கான அனுமதி ஆணைகளையும் 2 விவசாயிகளுக்கு பச்சை பயிறு கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகளையும் அமைச்சர் வழங்கி, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ள பச்சை பயிறு மூட்டைகளை எடை மற்றும் ஈரப்பதம் அளவீட்டு கருவி மூலம் பரிசோதனை செய்யும் பணிகளையும் பார்வையிட்டார். இதில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், வணிகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சைப்பயிறு கொள்முதல் செய்யும் திட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,S.M. Nassar ,Tiruvallur ,Agricultural Sales and Agribusiness Department ,S.M. Nasar ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...