×

₹47.70 லட்சம் செலவில் நடக்கும் சுப்பையார்குளம் தூர்வாரும் பணி: மேயர் ஆய்வு: சுத்தமான தண்ணீர் நிரப்ப நடவடிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் உள்ள சுப்பையார் குளம் சுமார் 7 ஏக்கரில் அமைந்துள்ளது. கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் இந்த குளத்துக்கு வந்து சேரும் வகையில் சாலைக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இது தவிர கிருஷ்ணன்கோவில் பாசன கால்வாய் தண்ணீரும், இந்த குளத்துக்கு வந்து சேரும். ஒரு காலத்தில் இந்த குளம் தெளிந்த நீரோடையாக விளங்கியது. புதுக்குடியிருப்பு, காமராஜர்புரம், அருந்ததியர் தெரு, மரச்சீனிவிளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குளத்தின் நீரை குளிக்கவும், குடிநீராகவும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் ஆகாய தாமரை மற்றும் கழிவுகளால் நிரம்பியது.

பல்வேறு பகுதிகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகள், இறைச்சி கழிவுகள், மருந்து கழிவுகளும் கொட்டப்பட்டு கடுமையான துர்நாற்றம் வீசியது. இந்த குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த குளம், நாகர்கோவில் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது. எனவே இந்த குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தும் வகையில், மாநகராட்சி மேயர் மகேஷ் தொடர்ந்து ஆய்வு செய்தார். இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்தார். அதன்படி குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை முதலில் அகற்ற திட்டமிட்டு, இந்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தன. பின்னர் குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது. கோடை காலத்தில் குளத்தில் முழுமையாக நீர் வற்றியவுடன் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் தெரிவித்து இருந்தார்.

அதன்படி தற்போது கடும் கோடை காரணமாக குளத்தில் தண்ணீர் முழுமையாக வற்றியது. இதையடுத்து குளத்தை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த குளம் ரூ.47.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. சுமார் 14 ஆயிரம் யூனிட் சகதி வெளியே எடுக்கப்பட்டுள்ளது. குளத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு, அலங்கார கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்படும்.

பூஞ்செடிகள் அமைக்கப்பட்டு, மின் விளக்குகள், இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். தற்போது சகதியை தூர்வாரி மண் எடுக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 1 வாரத்தில் இந்த பணிகள் முடிவடையும் என தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை சுப்பையார்குளம் தூர்வாரும் பணியை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.
அவருடன் மாநகராட்சி நகர் நல அலுவலர் ராம்குமார், நகரமைப்பு அலுவலர் சந்ேதாஷ், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் கலாராணி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த், மாநகர அவைத்தலைவர் பன்னீர் செல்வம், மாநகர துணை செயலாளர் வேல்முருகன், சிறுபான்மை பிரிவு ஜெகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

சுப்பையார்குளத்தில் நடந்து வரும் பணிகள் குறித்து மேயர் மகேஷ் கேட்டறிந்தார். சுப்பையார் குளத்துக்கு, நாகர்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கிருஷ்ணன்கோவில் சானல் வழியாக தான் தண்ணீர் வந்தது. ஆனால் கிருஷ்ணன்கோவில் சானல் தற்போது சாக்கடையாக மாறி விட்டது. ஏற்கனவே சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நேரடியாக சுப்பையார்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர பூமிக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்படும் திட்டம் உள்ளது. அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் மேயர் மகேஷ் ஆலோசித்தார். சாக்கடை நீர் கலக்காத வகையில் சுத்தமாக தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் உறுதி அளித்தார்.

The post ₹47.70 லட்சம் செலவில் நடக்கும் சுப்பையார்குளம் தூர்வாரும் பணி: மேயர் ஆய்வு: சுத்தமான தண்ணீர் நிரப்ப நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Supaiyar Pond ,Pudukudiyaram ,Krishnankovil ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...