×

பாஜகவுக்காக விட்டுக் கொடுத்த அதிமுக: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் அன்பரசன் வாபஸ்..!

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்புமனுவை அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றார். 224 தொகுதிகளைக் கொண்ட, கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழர்கள் உள்ளனர். அதில், 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவில் உள்ளனர். இதனால் தமிழர்களின் ஆதரவை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக எதிர்பார்க்கின்றனர். இதனிடையே கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விரும்பியது. ஆனால் அதிமுகவுக்கு பாஜக எந்த ஒரு தொகுதியையும் ஒதுக்கவில்லை. இதனால் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்பரசன் வாபஸ் பெற்றார். பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டியிட்டிருந்த நிலையில் திடீரென வாபஸ் பெற்றார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை இன்று பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.05.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிமுக வேட்பாளர் அன்பரசனை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து, பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான அன்பரசன் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில் எடப்பாடி தரப்பு வேட்பாளரும் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. வேட்பாளரை வாபஸ் பெற்றதால் கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியில்லை.

The post பாஜகவுக்காக விட்டுக் கொடுத்த அதிமுக: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் அன்பரசன் வாபஸ்..! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Pulikec Nagar ,Anbarasan ,Karnataka assembly ,Bengaluru ,Karnataka ,Pulikesi Nagar ,assembly ,
× RELATED தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை...