×

அப்பாவி உழவர்களின் நிலங்களை என்.எல்.சி. நிறுவனம் பறிக்க அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!

சென்னை: அப்பாவி உழவர்களின் நிலங்களை என்.எல்.சி. நிறுவனம் பறிக்க அரசு அனுமதிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் உழவர்களுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி விட்டதாகக் கூறி, அவற்றில் இயந்திரங்களைக் கொண்டு கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் இன்று ஈடுபட்டது. என்.எல்.சியின் அத்துமீறலுக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராடியதுடன் , இயந்திரங்களுடன் அதிகாரிகளையும் விரட்டியடித்துள்ளனர். என்.எல்.சியின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு எதிராக பொதுமக்களைத் திரட்டி பா.ம.க.வினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் நிலப்பறிப்பு தொடர்கிறது. தமிழ்நாட்டில் புதிதாக 6 நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. பல கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்காது என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதிமொழி அளித்தார்.

அதற்கு பிறகும் அப்பாவி உழவர்களின் நிலங்களை பறிக்க என்.எல்.சி நிறுவனம் முயல்வதை அரசு அனுமதிக்கக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதை அரசும், என்.என்.சி நிறுவனமும் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post அப்பாவி உழவர்களின் நிலங்களை என்.எல்.சி. நிறுவனம் பறிக்க அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..! appeared first on Dinakaran.

Tags : NLC ,Anbumani Ramadoss ,CHENNAI ,BAMA ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...