×

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக ஆயுதப்படை போலீசாருக்கு பெரு விருந்து விழா-சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு டிஐஜி பரிசளிப்பு

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக ஆயுதப்படை போலீசாருக்கு பெருவிருந்து விழா ஜோலார்பேட்டை அருகே நேற்று நடந்தது. அதில் சிறப்பு அழைப்பாளராக சரக டிஐஜி பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு வழங்கினார். வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலிருந்து கடந்த 2019ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட துறை அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுமான பணி முடியும் தருவாயில் இருந்து வருகிறது. தற்போது தற்காலிகமாக புதுப்பேட்டை ரோடு பகுதியில் எஸ்பி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டம் பிரிக்கப்பட்டு 4 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் மாவட்டத்தில் முதல் முறையாக ஆயுதப்படை போலீசாருக்கு பெரு விருந்து விழா நடத்த எஸ்பி பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்தார்.
இதனை அடுத்து ஜோலார்பேட்டை அடுத்த பால்நாக்குப்பம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆயுதப்படை போலீஸ்சாருக்கு பெரு விருந்து விழா திருப்பத்தூர் எஸ்பி தலைமையில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது ஆயுதப்படை ஆண், பெண் போலீசாரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் திருப்பத்தூர் எஸ்பி மூலம் அனைத்து போலீசாருக்கும் சிறப்பு நினைவு பரிசாக கைகடிகாரம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆயுதப்படை போலீசாருக்கு பெரு விருந்து உணவுகளை வழங்கி பரிமாறினார்கள்.

சிறப்பாக பணியாற்ற டிஐஜி அறிவுறுத்தல்

டிஐஜி முத்துசாமி பேசுகையில், ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் பெரு விருந்து விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். பாதுகாப்பு பணியின் போது சமூகவிரோதப் பணிகளை துரிதமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என ஆயுதப்படை போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக ஆயுதப்படை போலீசாருக்கு பெரு விருந்து விழா-சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு டிஐஜி பரிசளிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupattur District ,Armed Forces Police ,Banquet ,DIG ,Jolarpet ,Armed Forces Police - DIG Awards ,Outstanding Service ,Dinakaran ,
× RELATED ஓசூரில் லாரி மோதி தொழிலாளி பலி