×

பொள்ளாச்சியில் கனமழையால் தாழ்வான பகுதியில் புகுந்த மழைநீர்; வீடு இடிந்து சேதம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதியில் புகுந்த மழை நீரால் தன்னாட்சியப்பன் வீதியில் வீடு இடிந்து சேதமானது. இதனால் வீட்டிலிருந்து அனைவரும் வெளியேறினர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், நேற்று மாலையில் திடீரென இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த மழையால், ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சில வீதிகளில் கழிவுநீர் ஓடை நிரம்பி ரோட்டில் வழிந்தோடியது. இதில், உடுமலை ரோடு பிரதான ஓடை அருகே உள்ள, மரப்பேட்டை தன்னாட்சியப்பன் வீதியில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் வீட்டிலிருந்து அனைவரும் வெளியேறினர்.

இதையடுத்து இந்த கனமழைக்கு, அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது வீடு இடிந்து சேதமானது. அச்சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
இத்தகவலை அறிந்த நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீர் புகுந்த பகுதியை பார்வையிட்டனர். அப்போது சுமார் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை, அருகே உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தற்காலிகமாக தங்க வைத்து அவர்களுக்கு தேவையான வசதி செய்து தரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சியில் கனமழையால் தாழ்வான பகுதியில் புகுந்த மழைநீர்; வீடு இடிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Autonomous Street ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார...