×

கேர்ன்ஹில் வனப்பகுதியை பிரபலப்படுத்த வலியுறுத்தல்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள கேர்ன்ஹில் வனம் குறித்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் பார்வையிட்டு செல்லும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நீலகிரி வன கோட்டம், ஊட்டி அருகேயுள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, மான்கள், மலபார் அணில், நீலகிரி லங்கூர் குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்த வனப்பகுதியில் சூழல் மேம்பாட்டு குழு மூலம் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள பல்நோக்கு கட்டிடத்தில் வனப்பகுதியின் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பறவைகள், வன விலங்குகளின் ஒலிகள் அடங்கிய தொகுப்பும் உள்ளது. மேலும் சிறுத்தை, மான், காட்டுமாடு, அணில், புலி உள்ளிட்ட வன விலங்குகளின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர நீலகிரி தார் எனப்படும் வரையாடுகளின் வாழ்விடமும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வனத்திற்குள் சுற்றுலா பயணிகள் நடைபயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது.

சிறப்பம்சமாக மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஏறி நடந்து சென்று பார்த்து மகிழ்வது வழக்கம்.
இதுதவிர பல வகை ஆர்கிட் மலர் செடிகள் உள்ள குடில் போன்றவைகளும் உள்ளன. வனத்துறையால் நடத்தப்படும் இரு தங்கும் விடுதிகள் உள்ளன. பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தோடர் பழங்குடியின மக்களின் 2 விற்பனை மையங்கள் உள்ளன. இவற்றில் தோடர் எம்ராய்டரி சால்வை, தேன், சாக்லேட்கள் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனிடையே தற்போது கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் கேர்ன்ஹில் வனத்தில் உள்ள தொங்கு பாலம் மற்றும் வன விலங்குகளின் மாதிரிகளை பார்வையிட சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இங்கு வரக் கூடிய சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் நடைபயணம் மேற்கொள்வது புதிய அனுபவமாக உள்ளது என தொிவிக்கின்றனர். இருப்பினும் நகருக்கு வெளியே இப்பகுதி அமைந்துள்ள நிலையில், பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. இதனால் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளை வந்து செல்கின்றனர். இதனை பிரபலப்படுத்தும் வகையில் நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் கேர்ன்ஹில் குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post கேர்ன்ஹில் வனப்பகுதியை பிரபலப்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Cairnhill Forest ,Ooty ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்