×

கூடலூர், மரப்பாலம் பகுதியில் பயனின்றி பாழடைந்து வரும் சுற்றுலா தகவல் மையம்

*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கூடலூர் : சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு வட மாநிலங்கள் மற்றும் கேரளாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரும் நுழைவுப் பகுதியாக கூடலூர் உள்ளது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக கூடலூரில் அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் மையம் தற்போது பயனின்றி பாழடைந்து வருகிறது.

ஊட்டி, கூடலூர், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் நகரை ஒட்டிய மரப்பாலம் பகுதியில் இந்த சுற்றுலா தகவல் மையம் கடந்த 2011-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான தகவல்களை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த சுற்றுலா தகவல் மையம் ஒரு சில வருடங்கள் மட்டுமே முழுமையாக இயங்கியது. இங்கிருந்த உதவி சுற்றுலா அலுவலர் மாறுதலான நிலையில் புதிதாக நியமிக்கப்படவில்லை. இதனால் வளாகம், குடிநீர் தொட்டி உள்ளிட்டவைகள் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. மேலும் மதுப்பிரியர்களின் கூடாராமாகவும் இது மாறி வருகிறது.

இதன் அருகிலேயே சிறுவர் பூங்கா அமைப்பதற்கான இடத்தில் பாதியில் பணிகள் முடிந்த நிலையில் அந்த இடம் பயன்பாடின்றி கிடக்கிறது. நகராட்சிக்கு சொந்தமான இந்த நிலத்தை ஒட்டிய பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் நிலமும் உள்ளது. கடந்த பல வருடங்களுக்கு முன் நகராட்சி நிர்வாகத்தால் இந்த பகுதியில் லாரி நிறுத்தம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாதியில் கைவிடப்பட்டு பின்னர் கடந்த 2008ம் ஆண்டில் பராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா முயற்சியால் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு பணிகள் துவக்கப்பட்டன.

இதே பகுதியிலேயே மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுற்றுலா தகவல் மையமும் அமைக்கப்பட்டது.சிறுவர் பூங்கா பணிகள் பல்வேறு காரணங்களால் முழுமை பெறாத நிலையில் சுற்றுலா தகவல் மையமும் இயங்காமல் உள்ளது உள்ளது. சுற்றுலாத் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் கூடலூரில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இங்குள்ள சுற்றுலா தகவல் மையத்தை சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தவும், சிறுவர் பூங்காவை மேம்படுத்தி உள்ளுர் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாக மாற்ற வேண்டும் என்று உள்ளூர் மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கூடலூர், மரப்பாலம் பகுதியில் பயனின்றி பாழடைந்து வரும் சுற்றுலா தகவல் மையம் appeared first on Dinakaran.

Tags : Marapalam ,Kudalur ,Gudalur ,northern ,Kerala ,Nilgiris ,
× RELATED சிவகிரி அருகே கூடலூர் நாதகிரி...