×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்-மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்களுக்கு தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மையம், திறன்மிகு தொழில் முனைவோர் மற்றும் தொழில் துறை மேம்பாட்டு கூட்டமைப்பு, மாவட்ட தாட்கோ துறையின் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமை உள்ளாட்சி பிரதிநிதிகள் பயன்படுத்தி கொண்டு தங்கள் பகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை கொண்டு சேர்த்திட வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகளான உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற கூடிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்கள், உயர் கல்வி சார்ந்த படிப்புகள் ஆகியவைகளை மக்களுக்கு கொண்டு சென்று செயல்படுத்திட வேண்டும். கிராம வளர்ச்சிகளுக்கு தேவையான தன்னிறைவு திட்டங்களை வகுத்து செயல்படுத்திட வேண்டும்.

அதற்கான உதவிகளை உங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கி உறுதுணையாக இருக்கும். மேலும் அடுத்த தலைமுறைகளை சிறந்த தலைமுறைகளாக உருவாக்கிட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமான பங்காகும். ஆகையால் பொறுப்புடன், கடமையுடன் பணியாற்றிட வேண்டும். மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறும் இவ்விழிப்புணர்வு முகாமை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எதிர்வரும் காலங்களில் 3 மாதங்களுக்கு ஒரு முறை விழிப்புணர்வு மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யும் கூட்டம் நடத்தப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மகளிர் திட்ட அலுவலர் சுந்தரராஜன், மாவட்ட தாட்கோ மேலாளர் ஆனந்தமோகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்தரசேகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா மற்றும் அரசு அலுவலர்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்-மாவட்ட ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Tags : District Administration ,Adiravidar ,Aboriginal Local Organizations ,Kallakkuruchi ,Awareness Camp ,Aditravidar ,District ,
× RELATED காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி...