×

கொள்ளிடம் பகுதியில் காய்ப்பு திறன் குறையும் முந்திரி-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் முந்திரி காய்ப்பு திறன் குறைந்து வருவதால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சுற்று வட்டார பகுதியான திருமுல்லைவாசல், கூழையார். வேட்டங்குடி, எடமணல், வழுதலைகுடி, தாண்டவன் குளம், தொடுவாய், இருவக்கொல்லை, தற்காஸ், அரசூர் உள்ளிட்ட மணல் நிறைந்த பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொராண்டும் முந்திரி சாகுபடி அதிகரித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக முந்திரி சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கோடைக்காலங்களில் அதிக அளவில் மழை பொழிந்தது. காலம் தவறி பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பூக்கள் கருகி காய்ப்புத் திறன் குறைவாக உள்ளது. இதனால் முந்திரி கொட்டைகள் உற்பத்தி மிகவும் குறைந்து உள்ளது. இந்த ஆண்டு கிலோ முந்திரிக்கொட்டை 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இருந்தும் சரியான உற்பத்தி இல்லாத காரணத்தினால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். தற்பொழுது கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் முந்திரி பூ பூத்து காய் முற்றி அறுவடை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த முந்திரி சாகுபடி செய்யும் விவசாயி வில்வநாதன் கூறுகையில், விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து சாகுபடி பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் முந்திரி மரங்களில் வேளாண் அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் உரிய மருந்துகள் தெளிப்பதன் மூலம் அதிகம் பூக்கள் பூத்துக் குலுங்கி காணப்படுகிறது. அந்த நேரத்தில் ஏற்படும் மழை மற்றும் பனிபொழிவால் பூக்கள் கருகி காய்ப்புத்திறன் குறைந்து விடுகிறது.

இதனால் இந்த ஆண்டு முந்திரி சாகுபடி மகசூல் மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளனர். தற்பொழுது முந்திரி மரத்திற்கு மருந்துகள் தெளிக்கப்பட்டு அதிக செலவு செய்தும் இதுவரை எந்தவிதமான பயனும் இல்லாத நிலை உள்ளது. இதனால் பண்ருட்டி, வடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்து லாபத்தை எதிர்பார்த்து முந்திரி மரங்களை குத்தகை எடுத்த வியாபாரிகள் மிகவும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால் முந்திரி சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைவான விலையில் குத்தகை விட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு முந்திரி சாகுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

The post கொள்ளிடம் பகுதியில் காய்ப்பு திறன் குறையும் முந்திரி-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kollidham ,Kollidam ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடி பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்