×

திருவாடானை பகுதியில் அரிவாள்,கோடாரிகளை விற்பனை செய்யும் வடமாநில தொழிலாளர்கள்

திருவாடானை : திருவாடானை பகுதிகளில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சாலையோரத்தில் தங்கி பட்டறை அமைத்து அரிவாள், கோடாரி போன்ற விவசாய கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.முன்பெல்லாம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பண்ணை பயன்பாட்டிற்கு மண்வெட்டி, கடப்பாரை, கலப்பை, கூர்முனை கோடாரி, அரிவாள், கத்தி, கதிர் அரிவாள் போன்ற இரும்பு பொருட்களை பயன்படுத்தி வந்தோம். அதனை தயாரிக்கவும் பழுது பார்க்கவும் பட்டறைகள் பரவலாக இருந்தது. ஆனால் தற்போது அந்த பட்டறைகள் மூடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து வந்து திருவாடானை பேருந்து நிலையம், சந்தை பகுதிகள், கடற்கரை சாலைகள், கோயில் இருக்கும் பகுதிகள் ஆகிய மக்கள் கூடும் இடங்களில் திறந்த வெளியில் பட்டறை அமைத்துள்ளனர். அவர்கள், அரிவாள் கடப்பாரை, கோடாரி போன்ற விவசாய பயன்பாட்டுக்கான இரும்பு கருவிகளை நேரடியாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த கருவிகளை தயாரிக்க சிறிய கூடாரம் அமைத்து ஊது உலையின் மூலம் அடுப்புக்கரியில் தீமூட்டி பழைய இரும்பு பொருட்களை வெப்பப்படுத்துவர். பின்னர் அவைகள் நன்றாக பழுத்து காய்ச்சப்பட்ட இரும்பினை சம்மட்டியால் அடித்து கூர்மைப்படுத்தி ஆயுதங்களாக தயாரிக்கின்றனர்.இதனை அந்த வழியாக செல்பவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அந்த கருவிகளை ரூ.150, 250, 500 என பொருட்களுக்கு தகுந்தவாறு விலை பேரம் பேசி வாங்கி செல்கின்றனர்.

மேலும் தங்களிடம் உள்ள பழைய இரும்பு கருவிகளை ஒரு குறிப்பிட்ட விலை கொடுத்து புதுப்பித்தும் வாங்கி செல்கின்றனர். நவீன இயந்திரத்தில் கொடுத்து கடைந்து எடுப்பதை விட பழுது பார்த்த இரும்பு பொருட்கள் நீண்ட நாட்கள் உறுதித் தன்மையுடன் பயன்பாட்டில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் பரம்பரை பரம்பரையாக பட்டறை தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் தற்போது இந்த தொழில் நலிவடையும் நிலையில் இருக்கிறது. எனினும் மக்கள், வணிகர்கள், விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டும், பாரம்பரிய கைத்தொழிலை விட மனமில்லாமல் தான் இந்த தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மத்திய பிரதேசத்தில் இருந்து அனைத்து தமிழக கிராமங்களுக்கும் சென்று சாலையோர மற்றும் மரத்தடிகளில் பட்டறை அமைத்து கைத்தொழில் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

The post திருவாடானை பகுதியில் அரிவாள்,கோடாரிகளை விற்பனை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : North-state ,Thiruvadanai ,Tiruvadanai ,Central Territories ,Thiruvadani ,North State ,Thiruvadana ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...