×

ராமநாதபுரம்,கடலாடி அரசு மருத்துவமனைகளில் சித்தா, இயற்கை, யோகா மருத்துவ சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு

 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மற்றும் கடலாடி அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் சித்தா,இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பிரிவில் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனுக்காக அரசு மருத்துவமனைக்களை தரம் உயர்த்தி, புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மீண்டும் சித்தா, இயற்கை மருத்துவம் புத்துயிர் பெற்று வருகிறது. பொதுமக்களும் சிகிச்சைக்காக தேடி செல்வதால் ஆரோக்கியமான உலகம் உருவாகி வருகிறது.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கடலாடி அரசு மருத்துவமனையில் சித்தா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கை மருத்துவத்தில் சைக்கிளிங், மின்னணு நடைபயிற்சி இயந்திரம், உடற்பயிற்சி, மூலிகை ஆவி பிடித்தல், இயல்முறை சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபஞ்சர் பிரஷர், காந்த சிகிச்சை, மஜாஜ் மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவம், மனம், உடல், உணவு முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த பிரிவுக்கு ஆர்வத்துடன் வந்து பயனடைந்து வருகின்றனர்.

கடலாடி பொதுமக்கள் கூறும்போது, ‘‘மூட்டுவலி, உடல் வலி, நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், இருதய பிரச்னைகள் உள்ளிட்ட சில நோய்கள் என்பது மனித வாழ்வில் சாதாரணமாகி போய் விட்டது. இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை இருந்தாலும் கூட தொடர்ந்து மருந்து, மாத்திரை உள்ளிட்டவை எடுத்து கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.
இதனால் புது நோய்களும் உருவாகும் அச்சம் உள்ளது. குறிப்பாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கு கூடுதலாக பணம் தேவைப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயிகள், மீனவர்கள், கூலி தொழிலாளர்கள், நூறுநாள் வேலை தொழிலாளர்கள் தான் அதிகமாக உள்ளது. இதில் நடுத்தரம், ஏழ்மை, வறுமை கோட்டிற்கு கீழ்நிலையில் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு பணம் செலவழித்து மருத்துவம் பார்ப்பது என்பது முடியாத காரியம் ஆகும்.

இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் இயற்கை மற்றும் யோகா, சித்தா பிரிவு போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சிகிச்சை மற்றும் மருந்து உள்ளிட்ட மருத்துவம் எளிதாக கிடைக்கிறது. எந்தவொரு பக்கவிளைவுகளும் இன்றி, நாட்கள் ஆனாலும் கூட நோய் குணமாகி வருகிறது. இதனால் இந்த பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறோம்’’ என்றனர்.

இயற்கை மற்றும் யோகா மருத்துவர் முத்துலெட்சுமி, ‘‘தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை இயற்கை மற்றும் யோகா மருத்துவத்தை ஊக்குவித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கடலாடி அரசு மருத்துவமனை ஆகிய இரண்டில் மட்டும் வழக்கமான சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகிறது. இங்கு அனைத்து நாட்களிலும் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள மற்ற தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. அங்கு தொடர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஒரு சிலர் என கண்டறியப்பட்டால் ராமநாதபுரம் மற்றும் கடலாடி அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு சிசிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் முதியவர்களுக்கு அதிகமாக வரக்கூடிய முழங்கால், மூட்டு வலி, தசை பிடிப்பு, உடல் வலி உள்ளிட்டவற்றிற்கு அக்குபஞ்சர், மூலிகை ஆயில் மஜாஜ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. தலைவலி, சைனஸ் பிரச்னை, நீர்க்கட்டி, கர்ப்பப்பை பிரச்னை உள்ளிட்ட பெண்கள் உடல் சார்ந்த பிரச்னைகள், தைய்ராய்டு, நீரிழிவு, இருதய பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், சிறுநீராகம் பிரச்னைகள், தோல் உள்ளிட்ட சரும பிரச்னைகள், உடல் பருமன், நலிந்த உடல் பிரச்னைகள், நாள் பட்ட சளி உள்ளிட்ட முக்கிய நோய்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இருப்பதால் மருத்துவர் மற்றும் ஆண்,பெண் தனித்தனி மருத்துவ உதவியாளர்களை கொண்டு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பரிசோதனை செய்யும் போது மருத்துவர்களும் நோயாளிகளின் நோய், பிரச்னைகளை கேட்டறிந்து இந்த இயற்கை முறை மருத்துவ சிகிச்சையை செய்துகொள்ள பரிந்துரைக்கின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாக இயற்கை மருத்துவம் பிரிவில் வெளிநோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது’’ என்றார்.

சித்தா உதவி மருத்துவ அலுவலர் பார்வதி, ‘‘அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் சித்தா மருத்துவத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தாலும் கூட கடந்த 2020 முதல் கொரோனா தொற்று வந்ததில் இருந்து சித்தா மருத்துவத்தின் கசாயம், பொடி, மாத்திரைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

சளி, காய்ச்சல் பிரச்சனை உள்ளிட்டவற்றிற்கு கபசுரம், நிலவேம்பு, ஆடாதொடா மனப்பாகு, தாளிசாதி சூரணம், நாள்பட்ட சளி, இருமலுக்கு பிரமாணந்த பைரவ மாத்திரை, மூச்சு திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்னைகளுக்கு குடோரி மாத்திரை, சிவனார் அமிர்தம் பொடி, குழந்தைகளுக்கு சாந்த சந்திரோதய மாத்திரை, வசந்த குசுமாகர மாத்திரை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுபோன்று வளர்இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தை பிரசவித்த பெண்கள் என அனைத்து நிலையிலும் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்குரிய சித்தா மருந்துகள் வழங்கப்படுகிறது.

தைலம், மாத்திரை, சூரணம், லேகியம், பொடி என வழங்கப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் சித்தா மருத்துவத்தால் குணப்படுத்தக்கூடிய உடல் உள், வெளிப்பகுதி மற்றும் ரகசிய பகுதிகள், பாலியல் பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் சித்தா மருத்துவம் இருப்பதால் அரசு மருத்துவமணை சித்தா பிரிவிற்கு சென்று பொதுமக்கள் பயனடையலாம்’’ என்றார்.

The post ராமநாதபுரம்,கடலாடி அரசு மருத்துவமனைகளில் சித்தா, இயற்கை, யோகா மருத்துவ சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Kadaladi Government Hospitals ,Siddha ,Natura ,Yoga ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்