×

பெற்றோர் கண் முன் சம்பவம் சிற்றார்-2 அணையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு-சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

அருமனை : சிற்றார்-2 அணையில் மூழ்கி கேரளாவை சேர்ந்த சிறுவன் பெற்றோர் கண் முன்னே பலியானான்.கேரளா மாநிலம் வெள்ளறடை கூட்டப்பு, தொக்குபாறை பகுதியை சேர்ந்தவர் சம்நாத். ஆட்டோ டிரைவர். இவரது மகன் முகம்மது சொலீஹி(13). சம்நாத் குடும்பத்தினர் உற்றார் உறவினர்களுடன் 6 பேர் ஆட்டோவில் சிற்றார் அணை பகுதியை சுற்றிப் பார்க்க வந்திருந்தனர். காலையில் இருந்து அப்பகுதியை சுற்றி வந்தவர்கள் மதிய நேரம் தங்கள் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்த பிரியாணி மற்றும் மரவள்ளிக்கிழங்கு உணவை சிற்றாறு அணை -2 சங்கரன் காவு பகுதியில் அணையின் கரையோரம் பாறையின் மேல் அமர்ந்து சாப்பிட்டனர்.

மாலை 3 மணியளவில் கை கழுவுவதற்கு தனது சித்தி மகன் சுகேல் (11) என்பவருடன் முகமது சொலீஹி அணை பகுதி உள்ளே சென்றுள்ளார். அப்பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக இருந்தும் ஆபத்தை உணராமல் சுகேஷ் கை கழுவும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீருக்குள் தவறி விழுந்துள்ளார். உடனடியாக முகமது சொலீஹி கை கொடுத்து இழுக்க முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி அவரும் உள்ளே விழுந்துள்ளார். இதைப் பார்த்த உறவினரான நவாஸ் (30) அவர்களை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது சுகேல்-ஐ மட்டும் மீட்டெடுக்க முடிந்தது. முகம்மது சொலீஹி என்ன ஆனார் என்பது தெரியாமல் அனைவரும் திகைத்தனர்.

இவர்களுடைய அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நீரில் மூழ்கிய முகமது சொலீஹியை தேடும் பணியிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் அப்பகுதியில் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாலை ஆறு மணி ஆகியும் தண்ணீரில் மூழ்கிய சிறுவனை கண்டுபிடிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் ஆவேசமடைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 6.30 மணி அளவில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ஜான்சன் மகன் அருள்(48) என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் அணையின் மிக ஆழமுடைய பகுதியில் இருந்து முகம்மது சொலீஹி உடலை மீட்டார்.

அவரை பொதுமக்கள் பாராட்டினர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது. சிற்றார் அணை பகுதிகளில் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து விடுமுறை காலங்களில் பெரும் திரளாக மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆனால் இங்கு அரசு தரப்பில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட வில்ல என்றும், ஆபத்தான பகுதி என்ற அறிவிப்பு பலகையும் அப்பகுதிகளில் இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

தாய், தந்தை மற்றும் குடும்ப உறவினர்கள் கண் முன்னே சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது பற்றி கடையாலுமூடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெற்றோர் கண் முன் சம்பவம் சிற்றார்-2 அணையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு-சுற்றுலா வந்த இடத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Chithar ,Arumanai ,Kerala ,Chittar-2 ,Velaradai Koppu ,
× RELATED கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள...