×

அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க கோரிக்கை

 

சிவகங்கை, ஏப்.24: தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் வாசுகி மற்றும் நிர்வாகிகள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐசிடிஎஸ் திட்டத்தின் கீழ் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையங்களுக்கு வரும் 2 வயது முதல் 6 வயது உள்ள குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. மே மாதத்தில் வெப்பத்தின் தாக்குதல் காரணமாக மாணவர்களின் உடல்நிலை மற்றும் தளர்வு நிலை இவைகளை கருத்திற்கொண்டு மே மாத விடுமுறை பள்ளி கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது.ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாத விடுமுறை வழங்கப்படுவதில்லை.

அங்கன்வாடி மையங்களுக்கு மே மாத விடுமுறை குறித்த கோரிக்கை காரணமாக கடந்த 10.4.2018ல் வெளியான அரசாணைப்படி சுழற்சி முறையில் மே மாத விடுமுறை வழங்கப்பட்டது. மேலும் பல அங்கன்வாடி மையங்களின் மேல் கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட் போடப்பட்டுள்ளது. பல மையங்களில் மின் இணைப்பு இல்லை. அதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. மேலும் அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள் மே மாத வெப்பம் காரணமாக குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுக்கின்றனர். தமிழக அரசு அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் குழந்தைகளின் வயது மனநிலை, மே மாதத்தின் வெப்பநிலை, எதார்த்த நிலை இவைகளை கருத்திற்கொண்டு அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் சுழற்சி முறையின்றி விடுமுறை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi Centers ,Sivagangai ,Tamil Nadu ,ICTS ,Union ,General Secretary ,Vasuki ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்