தர்மபுரி: தர்மபுரி ராமக்காள் ஏரியில் தண்ணீர் அதிகமாக இருப்பு உள்ளதால், ஏரியின் பாசன பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி- நகர எல்லையில், கிருஷ்ணகிரி சாலையில் 265 ஏக்கர் பரப்பளவில் ராமக்காள் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சின்னாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். இதன் உபரிநீர் சனத்குமாரநதியில் கலந்து, கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் சேரும். இந்த ஏரியை நம்பி 200க்கும் மேற்பட்ட பாசன நிலங்கள் உள்ளன. நெல், கரும்பு மட்டுமே சாகுபடி செய்யப்படும். ஏரியில் தண்ணீர் முழுமையாக தேங்கி நிற்கும்போது, கடல் போல் காட்சியளிக்கும். தர்மபுரி நகரம் மற்றும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் உயர்ந்து காணப்படும். கிணற்றில் தண்ணீர் மேலே இருக்கும்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால், சின்னாற்றில் இருந்து தண்ணீர் வந்தது. இதில் ராமக்காள் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. தற்போது ஏரியில் தண்ணீர் 75 சதவீதம் இருப்பு உள்ளது. தண்ணீர் இருப்பை வைத்து, ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த பகுதி நெல் வயல்களால் பச்சைபசேல் என காணப்படுகிறது. நடப்பாண்டு 3 போக விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
The post ராமக்காள் ஏரி பாசன பகுதியில் நெல் சாகுபடி appeared first on Dinakaran.
