×

ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது ஆர்சிபி: டு பிளெஸ்ஸி மேக்ஸ்வெல் அதிரடி அரை சதம்

பெங்களூரு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கோஹ்லி, டு பிளெஸ்ஸி இணைந்து ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். போல்ட் வீசிய முதல் பந்திலேயே கோஹ்லி டக் அவுட்டாகி வெளியேற பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 2 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் ஜெய்ஸ்வால் வசம் பிடிபட்டார்.

ஆர்சிபி 12 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், டு பிளெஸ்ஸி – மேக்ஸ்வெல் இணைந்து 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக ரன் குவித்தனர். மேக்ஸ்வெல் 27 பந்தில் அரை சதம் விளாச, டு பிளெஸ்ஸி 31 பந்தில் அரை சதம் அடித்தார். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ராயல்ஸ் பந்துவீச்சை பதம் பார்த்த இருவரும் 127 ரன் சேர்த்து அசத்தினர். டு பிளெஸ்ஸி 62 ரன் (39 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

மேக்ஸ்வெல் 77 ரன் (44 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அஷ்வின் சுழலில் ஹோல்டர் வசம் பிடிபட்டார். கார்த்திக் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. வில்லி 4, சிராஜ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணி 50 ரன்னுக்கு கடைசி 7 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் பந்துவீச்சில் போல்ட், சந்தீப் தலா 2, அஷ்வின், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜெய்ஸ்வால், பட்லர் இணைந்து துரத்தலை தொடங்கினர். சிராஜ் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். எனினும், ஜெய்ஸ்வால் – படிக்கல் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்து மிரட்டினர். படிக்கல் 52 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜெய்ஸ்வால் 47 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது, ராயல்ஸ் அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

கேப்டன் சஞ்சு சாம்சன் 22 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க, ஷிம்ரோன் ஹெட்மயர் 3 ரன் எடுத்து ரன் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஜுரெல், அஷ்வின் அதிரடியில் இறங்க ஆட்டம் பரபரப்பானது. அஷ்வின் 12 ரன் விளாசி (6 பந்து, 2 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஜுரெல் 34 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), அப்துல் பசித் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 3, சிராஜ், வில்லி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மேக்ஸ்வெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது ஆர்சிபி: டு பிளெஸ்ஸி மேக்ஸ்வெல் அதிரடி அரை சதம் appeared first on Dinakaran.

Tags : RCB ,Rajasthan Royals ,Du Plessis Maxwell ,Bengaluru ,IPL ,Royal Challengers ,Bangalore ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜநடை: லக்னோவை வீழ்த்தி 8வது வெற்றி