×

அரசு நடத்திய இலவச திருமண விழாவில் 200 மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: ம.பி பாஜ அரசுக்கு கண்டனம்

திண்டோரி: மத்திய பிரதேசத்தில் அரசு நடத்திய இலவச திருமண விழாவில் மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு, அட்சய திருதியையொட்டி முதல்வரின் மகள் திருமணத் திட்டத்தின் கீழ் 219 ஜோடிகளுக்கு திண்டோரி மாவட்டத்தின் கடசராய் நகரில் நேற்றுமுன்தினம் இலவச திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது, 219 ஜோடிகளில் இருந்த 200 மணப்பெண்களிடம் கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிலர் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், எந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் ஏழை மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டது? எதன் அடிப்படையில் அரசு இதனை அனுமதித்தது? இது ஏழைகளை அவமானப்படுத்துவதாகும். இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியது.

கர்ப்ப பரிசோதனை நடத்தும்படி அரசு அறிவுறுத்தவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த பெண்களில் சிலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கூறியதால், அங்கிருந்த மருத்துவர்கள் அவர்களை பரிசோதிக்க முடிவு எடுத்தனர். இதில் 4 பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது என்று மாவட்ட நிர்வாக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

The post அரசு நடத்திய இலவச திருமண விழாவில் 200 மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: ம.பி பாஜ அரசுக்கு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tindori ,Congress ,Madhya Pradesh ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...