×

முதல்வரின் தியாகம், மக்கள் பணிக்கு வரலாற்று கண்காட்சியே சாட்சி: நடிகர் பிரபு புகழாரம்

திருச்சி: ‘முதல்வர் மு.க.ஸ்டாலினின் தியாகங்கள், மக்கள் பணிக்கு வரலாற்று கண்காட்சியே சாட்சி’ என நடிகர் பிரபு புகழாரம் தெரிவித்து உள்ளார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டமாக, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’’ தமிழ்நாடு முதல்வரின் வாழ்க்கை வரலாறு கண்காட்சி நேற்று தொடங்கியது. வரும் 30ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை வரிசைப்படுத்தி 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடிகர் பிரபு திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் நடிகர் பிரபு அளித்த பேட்டி: நான் சிறுவயது முதல் மு.க.ஸ்டாலினோடு பழகி வருகிறேன். அவருடைய கடின உழைப்பு என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். படிப்படியாக உயர்ந்து இன்று முதல்வர் என்ற இந்த இடத்திற்கு வந்துள்ளார். இந்த புகைப்பட கண்காட்சியில் அவர் கட்சிக்காக செய்த பணியும், அதனால் அவர் இளைஞர் அணி தலைவராகவும், மேயராகவும் இன்று முதல்வராகவும் உயர்ந்துள்ளார். அதேபோல் அவர், மக்களுக்காக எவ்வளவு பணி மற்றும் தியாகங்களை செய்துள்ளார் என்பதற்கு இந்த கண்காட்சியே சான்றாக உள்ளது. எங்கள் அண்ணன் மு.க.ஸ்டாலின், இன்று எப்படி தமிழக மக்களுக்கு பல நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறாரோ, அதேபோல் இனிவரும் காலங்களிலும் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அவருடைய உடல் நலம் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று எங்களுடைய ஐயாவிடமும், டாக்டர் கலைஞரிடமும் வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post முதல்வரின் தியாகம், மக்கள் பணிக்கு வரலாற்று கண்காட்சியே சாட்சி: நடிகர் பிரபு புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Prabhu Pukhazaram ,Trichy ,M.K.Stalin ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...