×

கடும் பனிப்பொழிவால் கேதார்நாத் யாத்திரை முன்பதிவு நிறுத்தம்

ரிஷிகேஷ்: கடும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் இந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த யாத்திரை சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்கள் இந்த புனித தலங்களுக்கு சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள். குளிர்காலங்களில் கோயில்களின் குகைகள் மூடப்பட்டிருக்கும். மேலும், பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பக்தர்கள் பாத யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நேற்று முன்தினம் கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை தொடங்கியது. கேதார்நாத் கோயில் ஏப்ரல் 25ம் தேதியும், பத்ரிநாத் கோயில் ஏப்ரல் 27ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கேதார்நாத் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கும் இடங்கள் முழுவதும் பனியால் சூழப்பட்டுள்ளன. கர்வால் இமயமலையின் மேற்கு பகுதியில் மழையுடன், கடும் பனிப்பொழிவும் இருப்பதால் கேதார்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலையை ஆய்வு செய்து பக்தர்களின் நலன் கருதி அரசு முடிவெடுக்கும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

The post கடும் பனிப்பொழிவால் கேதார்நாத் யாத்திரை முன்பதிவு நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kedarnath Yatra ,Rishikesh ,Uttarakhand ,Dinakaran ,
× RELATED அமேதியில் போட்டியா?.. ராபர்ட் வத்ரா ரிஷிகேஷில் வழிபாடு