×

ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்துவந்த காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் கைது

* பஞ்சாப் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்
* பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு

சண்டிகர்: ஒருமாதத்திற்கும் மேலாக பஞ்சாப் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி தலைமறைவாக இருந்து வந்த காலிஸ்தான் ஆதரவாளரான சீக்கிய மத போதகர் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டார். குருத்வாராவில் பிரசாரம் செய்து விட்டு வெளியே வந்த அவரை சுற்றிவளைத்து கைது செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரை உடனடியாக விமானத்தில் அசாம் கொண்டு சென்று திப்ரூகர் சிறையில் அடைத்தனர்.

பஞ்சாப் மாநிலத்தை பிரித்து ‘காலிஸ்தான்’ என தனி நாடு உருவாக்கும் நோக்கத்துடன் வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் அம்ரித் பால் சிங் (29). இவரது கூட்டாளியான லவ்ப்ரீத் சிங் பல்வேறு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.

கைது செய்யப்பட்ட அவரை விடுவிக்கக் கோரி அம்ரித் பால் தலைமையில் கடந்த மார்ச் 18ம் தேதி அமிர்தசரஸ் நகரின் புறநகரில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் சிலர் வாள் மற்றும் துப்பாக்கிகளை காட்டி நுழைந்து, அங்கிருந்த போலீசாரை தாக்கினர். இதில் போலீசார் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அம்ரித் பாலின் கூட்டாளிகள், உதவியாளர்களை போலீசார் கொத்து கொத்தாக கைது செய்தனர். அம்ரித் பாலை கைது செய்ய முயன்ற போது, 2 முறை அவர் போலீசிடம் சிக்காமல் தப்பினார்.

தலைமறைவான அவரை பஞ்சாப் போலீசார் தேடுவதால், காலிஸ்தான் ஆதரவாளர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் சர்வதேச அளவிலும் இந்த விவகாரம் பேசுபொருளானது. கடந்த 35 நாட்களாக பஞ்சாப் போலீசார் தேடி வந்த நிலையில், அம்ரித்பால் நேற்று காலை 6.45 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப்பின் ரோட் கிராமத்தில் அவர் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஐஜி சுக்செயின் சிங் கில் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘அமிர்தசரஸ் போலீசாரும், பஞ்சாப் போலீஸ் உளவுத்துறையும் இணைந்து நடத்திய ஆபரேஷன் இது. ரோட் கிராமத்தில் அம்ரித் பால் வரும் தகவல் அறிந்து ஒட்டு மொத்த பகுதியையும் சுற்றி வளைத்தோம். அங்குள்ள குருத்வாராவில் அம்ரித் பால் இருந்தார். போலீஸ் உடையில் குருத்வாராவில் நுழையக் கூடாது என்ற புனிதத்துவத்தை மதித்து வெளியில் காத்திருந்தோம்.

அதே சமயம், ஒட்டுமொத்த கிராமமும் சுற்றி வளைக்கப்பட்ட தகவலை மட்டும் அம்ரித்பாலுக்கு அனுப்பி வைத்தோம். அதைத் தொடர்ந்து குருத்வாராவில் இருந்து அவர் வெளியில் வந்ததும் கைது செய்யப்பட்டார்’’ என்றார். அம்ரித் பால் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், உடனடியாக அவர் பதிண்டாவிலிருந்து சிறப்பு விமானத்தில் அசாமின் திப்ருகர் மாவட்ட சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பகல் 2.20 மணிக்கு திப்ருகர் கொண்டு வரப்பட்ட அம்ரித்பால் சிங் அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது கூட்டாளிகளும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, முன்னெச்சரிக்கை கருதி, விமான நிலையத்திலிருந்து சிறைச்சாலை வரை 15 கிமீ தூரத்திற்கு போக்குவரத்தை போலீசார் தடை செய்திருந்தனர். மேலும், சாதாரண உடையில் போலீசாருடன் தனிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அம்ரித்பால் கைதை தொடர்ந்து பஞ்சாப்பிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

* அமைதியை சீர்குலைப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘‘அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைத்து, நாட்டின் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் எந்த அப்பாவியையும் தொந்தரவு செய்ய மாட்டோம். பழிவாங்கும் அரசியலும் செய்ய மாட்டோம். இந்த 35 நாட்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணிய 3.5 கோடி பஞ்சாபியர்களுக்கு நன்றி’’ என்று கூறி உள்ளார்.

* சரணடைய வந்தவர்

அம்ரித் பால் சரணடைய தயாராக இருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில் குருத்வாராவில் மத பிரசாரம் செய்யும் அம்ரித் பால், ‘‘காலிஸ்தானுக்காக போராடி ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் உயிர் நீத்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே பிறந்த இடம் இது. எனது தலைப்பாகை கட்டுதல் நடந்த இடம் இது. வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவராக இங்குதான் நான் பொறுப்பேற்றேன். தற்போது இந்த இடத்திலிருந்தே நான் சரணடைய உள்ளேன். இந்த நிலத்திற்கான நம் போராட்டம் இனியும் தொடரும். இந்த பொய் வழக்குகளை நான் எதிர்கொள்வேன்’’ என்று கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

The post ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்துவந்த காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் கைது appeared first on Dinakaran.

Tags : Amritbal Singh ,Punjab ,Punjab Police ,Calistan ,
× RELATED 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல்சை வீழ்த்தியது பஞ்சாப்