×

மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பிரவேசம் ஆலங்குடி, திட்டை, சூரியனார் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா: விடிய, விடிய குருபகவானை வழிபட்ட பக்தர்கள்

வலங்கைமான்: மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திட்டை வசிஷ்டேஸ்வரர், சூரியனார் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. பக்தர்கள் விடிய விடிய குருபகவானை வழிபட்டனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் குரு பரிகார கோயிலான ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்றுமுன்தினம் இரவு 11.27 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனையொட்டி இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தது. முன்னதாக உலக நன்மை வேண்டி குருபகவானுக்கு 2வது கால குருபரிகார ஹோமம் நடந்தது. அதனைத்தொடர்ந்து குரு பகவானுக்கு 108 கலச அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ தட்சிணாமூர்த்தி பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11.27 மணிக்கு குருபகவான் பெயர்ச்சியடைந்த நேரத்தில் மூலவர் குருபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கூட்டம் அதிகளவில் இருந்ததால் நீண்டவரிசையில் நின்று பக்தர்கள் விடிய, விடிய தரிசனம் செய்தனர். இதேபோல் தஞ்சாவூர் அடுத்த திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய நடந்தது. இதேபோல் சூரியனார் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்து. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். குருப்பெயர்ச்சியையொட்டி வரும் 1ம் தேதி லட்சார்ச்சனையும், 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது.

The post மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பிரவேசம் ஆலங்குடி, திட்டை, சூரியனார் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா: விடிய, விடிய குருபகவானை வழிபட்ட பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Meena Rasi ,Mesha ,Rasi ,Alangudi, ,Thittai ,Suryanar Temples ,Lord Vidya ,Vidya Gurubhagavan ,Valangaiman ,Guru ,Bhagavan ,Alangudi Apadsakayeswarar Temple ,Thittai Vasishteswarar ,Suryanar Temple ,Alangudi ,
× RELATED மங்களம் பொங்கும் பங்குனி மாதம்!