×

அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகை கடைகளில் வியாபாரம்: 11 ஆயிரம் கோடிக்கு விற்பனை

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விடிய, விடிய நகைக்கடைகள் திறந்திருந்திருந்தன. மக்கள் ஆர்வமுடன் வந்து நகைகளை வாங்கி சென்றனர். நேற்றும், இன்றும் 11 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மற்றும் அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அட்சய திருதியையில் ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது.

இந்தாண்டு அட்சய திருதியை நேற்று காலை 7.49 மணிக்கு தொடங்கியது. இது இன்று காலை 7.47 மணி வரை நீடித்தது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் அனைத்தும் நேற்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை நகைக்கடைகள் அதிகமாக உள்ள தி. நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை, போரூர், பாடி உள்ளிட்ட பகுதியில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

முன்பதிவு செய்பவர்களுக்கு பல கடைகளில் தங்க நகைகள், நாணயங்களுக்கு செய்கூலி கிடையாது. கிராமுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை வரை தள்ளுபடி. முன்பதிவு செய்யும் போது என்ன விலை விற்றதோ, அந்த விலைக்கு தங்கம் விற்பனை, தங்க நகை வாங்குபவர்களுக்கு வீடுகளுக்கே வந்து அழைத்து செல்ல வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தங்களுக்கு பிடித்த நகைகளை மக்கள் தேர்வு செய்து வாங்கினர். தங்க நாணயங்களையும் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

வழக்கமாக அட்சய திருதியை இன்று தங்கம் விலை அதிகரிப்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், நேற்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.5605க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.44840க்கும் விற்கப்பட்டது. கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நேற்று நள்ளிரவு வரை கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

அட்சய திருதியை 2ம் நாளான இன்று காலையிலேயே நகை கடைகள் திறக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நகைக்கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. பிற்பகல் வரை கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘’அட்சய திருதியை என்பதால் மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கி சென்றனர். இதனால், விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் வரை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. இன்றும் காலையில் நகைக்கடைகள் திறக்கப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் நகைகளை வாங்கி செல்கின்றனர்.

கடந்தாண்டு அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது’’ என்றார். நேற்றும், இன்றும் என 2 நாட்களில் மட்டும் 20 டன் அளவுக்கு நகைககள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 11 ஆயிரம் கோடி அளவுக்கு நகை விற்பனையாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

The post அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகை கடைகளில் வியாபாரம்: 11 ஆயிரம் கோடிக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Akshaya Trithi ,CHENNAI ,Akshay Trithi ,
× RELATED அட்சய திரிதியை வரும் 10ம் தேதி...