×

300 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 பேர் பலி: 17 பேர் படுகாயம்

போடி: மூணாறு அருகே 300 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து சிறுவன் உள்பட 4 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் காயமடைந்த 17 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம்‌ சண்முகாபுரத்தை சேர்ந்த 21 பேர், கேரளா மாநிலம் மூணாறு லட்சுமி எஸ்டேட்டில் இன்று (ஏப்.23) நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஒரு வேனில் நேற்று புறப்பட்டனர். மாலை சுமார் 6.30 மணியளவில் தேனி மாவட்டம், போடிமெட்டுச் சாலையை கடந்து, கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பூப்பாறை மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகிலிருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த பெருமாள் (59), வள்ளியம்மாள் (70) சுசீந்திரன் (8), சுதா (35) ஆகிய 4 ேபரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் திருநெல்வேலியை சேர்ந்த தெய்வானை(55), சீதாலட்சுமி(32), அற்புதசெண்பகம்(40), பிரகாஷ்(15), செல்வபிரகாஷ் (15), கிருஷ்ணம்மாள்(65), சுசீலேந்திரன்(4), சுடர்ஒளி(37), கண்ணன்(32), தூத்துக்குடியை‌ சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(13), மகேஷ் கண்ணன்(40), சுவாதி (16), இந்திராணி(52), தனிஷ்கா(5), வசந்தி (31), டிரைவர் கணேஷ்(29) உட்பட 17 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கேரளாவில் உள்ள ராஜாக்காடு, ராஜக்குமாரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post 300 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 பேர் பலி: 17 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thuraru ,
× RELATED மூணாறு அருகே கேப் ரோடு மலைச்சாலையில் திடிரென மண் மற்றும் பாறை சரிவு