×

மெரினாவில் வாலிபரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது: திருடர்கள் என நினைத்து தவறு செய்துவிட்டோம் என வாக்குமூலம்Marina_youth_murder_case_arrested

சென்னை: மெரினா கடற்கரையில் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட வந்த போது, வாலிபரை அடித்து கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடர்கள் என நினைத்து தவறு செய்துவிட்டோம் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் 3 வாலிபர்கள் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கிடந்தனர். உடனே நடைபயிற்சி செய்த பொதுமக்கள் உடனே அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 வாலிபர்களை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் செல்லும் போது 3 வாலிபர்களில் ஒருவர் உயிரிழந்தார். 2 இரண்டு பேர் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(20), ஆவடியை சேர்ந்த அரவிந்தன்(22), சஞ்சய்(18) என தெரியவந்தது. 3 பேரும் ஐடிஐ முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். அதில் சஞ்சய் என்பவருக்கு கடந்த வியாழக்கிழமை பிறந்த நாள் என்பதால், 3 பேரும் வியாழன்கிழமை இரவு மெரினா கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு. மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறிய பிறகு கையில் கொண்டு வந்த ஹெல்மெடை தொலைத்துள்ளனர்.

பிறகு தங்களது ஹெல்மெட்டை தேடி மெரினா கடற்கரை முழுவதும் சுற்றிய போது, மெரினா கடற்கரையில் கடையில் வேலை செய்யும் 8 பேர் கொண்ட கும்பல், தங்களது கடையில் திருட வந்ததாக நினைத்து தகராறு செய்துள்ளனர். அப்போது 3 பேரும் மது போதையில் இருந்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிகொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 8 பேர் கொண்டு கும்பல் கையில் வைத்திருந்த கத்தி மற்றும் உருட்டு கட்டையால் கடுமையாக விக்னேஷ், அரவிந்தன், சஞ்சய் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் 3 பேரும் சுய நினைவிழந்து மணல் பரப்பிலேயே சுருண்டு விழுந்துள்ளனர். அதில் விக்னேஷ் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து அண்ணாசதுக்கம் போலீசார் மெரினா கடற்கரையில் உள்ள சிசிடிவி பதிவுகள் மூலம் மெரினா கடற்கரை பகுதியில் கடையில் கூலித்தொழிலாளிகளாக பணியாற்றி வந்த வண்டலூரை சேர்ந்த வினோத்(21), மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரசாந்த்(20), தி.நகரை சேர்ந்த கவுதம்(21),கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நந்திஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் படி இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஆறுமுகம், கவுதம்(24), கார்த்திக், பாஸ்கர் ஆகிய 4 பேரை செல்போன் சிக்னல் உதவியுடன் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடர்கள் என நினைத்து தவறு செய்துவிட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருந்தாலும் போலீசார் கொலை குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மெரினாவில் வாலிபரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது: திருடர்கள் என நினைத்து தவறு செய்துவிட்டோம் என வாக்குமூலம்Marina_youth_murder_case_arrested appeared first on Dinakaran.

Tags : Marina ,Chennai ,Marina beach ,
× RELATED சென்னை மெரினா கடற்கரையை சுற்றிப்...