×

மலம்புழா அணையில் காட்டு யானைகள் முகாம்: பொதுமக்கள் அச்சம்

பாலக்காடு: மலம்புழா அணையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு தாலுகா கல்லடிக்கோடு, ஆனைக்கட்டி, அகழி, தாவளம் மற்றும் முள்ளி ஆகிய இடங்களிலும், நெல்லியாம்பதி மலை சாலையில் போத்துண்டி, கைக்காட்டி, போத்துப்பாறை ஆகிய இடங்களிலும், மலம்புழா -கஞ்சிக்கோடு சாலைகளிலும் வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீர் தேடி வருகின்றன. காட்டு யானைகள் சிலநேரங்களில் வாகனங்களை செல்பவர்களை விரட்டியும் வருகின்றன. நெம்மாரா நெல்லியாம்பதி சாலையில் காட்டுமாடுகள், யானைகள், கடமான்கள், வரையாடுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

வாகனங்களில் செல்வோர் கவனமாக செல்லுமாறு போத்துண்டி வனத்துறை சோதனைச்சாவடி காவலர்கள் எச்சரித்துள்ளனர். பாலக்காடு மாவட்டம் மலம்புழா அருகே கவ்வா, கஞ்சிக்கோடு ஆகிய இடங்களில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கடுமையான வெயிலின் தாக்கத்தாலும், ஓடைகளில் தண்ணீர் இன்மையாலும், வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறி மலம்புழா அணை தண்ணீரை தேடி வருகின்றன.  இவை மாலை நேரங்களில் கூட்டமாக மலம்புழா அணை சுற்று வட்டார பகுதியான கவ்வா, கஞ்சிக்கோடு, படலிக்காடு, ஆனைவாய் ஆகிய இடங்களில் கூட்டமாக உலா வந்து பொதுமக்களை பீதியடைய செய்கிறது. மேலும், தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியும், தென்னை, வாழை, ரப்பர், பாக்கு ஆகியவற்றை துவம்சம் செய்துவிட்டு செல்கின்றன. மாலை நேரங்களில் காட்டு யானைகள் குட்டிகளுடன் ஜாலியாக மலம்புழா அணைக்கு வந்து சுகமான குளியல் போட்டு, தேவையான அளவிற்கு தண்ணீர் பருகி செல்கிறது. இவற்றை சுற்றுலாப் பயணிகளும், ஊர்மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

கோத்தகிரியில் வாகன ஓட்டிகளை துரத்திய காட்டுயானை

கோத்தகிரி மலைப்பாதையில் முள்ளூர் அருகே 6க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. கூட்டத்திலிருந்து பிரிந்த காட்டு யானை சாலையை கடந்தது. அப்போது வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். ஆக்ரோஷம் அடைந்த காட்டுயானை வாகன ஓட்டிகளை துரத்தியது. இதனால், அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனர். பின்னர், காட்டுயானை சாலையை கடந்து வனப்பகுதிக்கு சென்றது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post மலம்புழா அணையில் காட்டு யானைகள் முகாம்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Malampuzha Dam ,Palakkad ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...