×

சோழவந்தான் அருகே குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான்: குருவித்துறையில் நேற்றிரவு குரு பெயர்ச்சி விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, குருவித்துறையில் வைகைக் கரையோரம் வரலாற்று சிறப்புமிக்க சித்திர ரதவல்லப பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் எதிரே தனி சன்னதியில் சுயம்புவாக குரு பகவான், பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் காட்சியளிக்கிறார். அவரது அருகில் சக்கரத்தாழ்வாரும் சுயம்புவாய் எழுந்தருளியுள்ளார். இங்கு ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று இரவு 11.24 மணிக்கு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியானார்.

இதையொட்டி கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. முதற்கட்டமாக நேற்று பகல் 12 மணி வரை லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு கோயில் பட்டர்களான ரெங்கநாதர், தர், பாலாஜி, ராஜா ஆகியோர் குரு பெயர்ச்சி பரிஹார மஹாயாகத்தினை நடத்தினர். பின்னர் யாக சாலையிலிருந்து புனித நீர் குடங்கள் எடுத்து வரப்பட்டு, இரவு 11.24 மணிக்கு சுயம்பு மற்றும் மூலவரான குரு பகவான், சக்கரத்தாழ்வார் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இந்த ஆண்டு பரிஹாரம் செய்ய வேண்டிய மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்குரியவர்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர். குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகளில் அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை எஸ்.பி சிவபிரசாத் தலைமையில், டிஎஸ்பி பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் மேற்பார்வையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் தலைமையில், வருவாய்த்துறையினர் மற்றும் செயல் அலுவலர் பாலமுருகன் மற்றும் நாகராஜ், மணி, ஜனா உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், சுகாதாரத் துறையினர் மருத்துவ வசதிகளையும் செய்திருந்தனர். மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

The post சோழவந்தான் அருகே குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Guru transfer ceremony ,Kuruvithura ,Cholavanthan ,Guru Passing ceremony ,Guruvitura ,Madurai district ,Kuruvithurai ,
× RELATED தேர்தல் பிரசாரம் விறுவிறு: டீக்கடைக்காரர்கள் `குஷி’