×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் RTE சட்டம் 2009ன் படி மாணவர் சேருவதற்கு ஆன்லைன் வாயிலாக வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் – 2009 சட்டப்பிரிவின் படி நடப்பு கல்வியாண்டில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் கல்வி பயில வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கைக்கு வரும் 18ம் தேதி வரை rte.tnscdhools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்தும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும் சம்மந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் வரும் 21ம் தேதி மாலை வெளியிடப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் எல்கேஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை சம்மபந்தப்பட்ட அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிறப்புச் சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்று ஆகியவை இணைக்க வேண்டும். பெற்றோர்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விணணப்பிக்கலாம். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமைய அலுவலகங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்மந்தப்பட்ட பள்ளியில் வரும் 23ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைகக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர்.

சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் வரும் 24ம் தேதி இணைய தளத்திலும் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் வரும் 29ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும். கூடுதல் தகவல் பெற நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்) அணுகி விவரங்களை பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,
× RELATED நாகையில் இருந்து 13ம் தேதி...