×

அதிகாரிகள் நடவடிக்கை இல்லை என விவசாயி புகார்: சாப்பிடாமல் கூட வேலை செய்கிறோம் ஒட்டுமொத்தமாக குறை சொல்லாதீர்கள்

* நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி சுகர், பிபி வந்திடுச்சு…
* உணர்ச்சிவசப்பட்டு பேசிய கலெக்டரின் வீடியோ வைரல்

திருவண்ணாமலை: கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய விவசாயியிடம், சாப்பிடாமல் கூட உங்களுக்காகதான் வேலை செய்கிறோம். ஒட்டுமொத்தமாக குறை சொல்லாதீர்கள். நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றிய பல அதிகாரிகளுக்கு சுகர், பிபி வந்திடுச்சு என குறைத்தீர் கூட்டத்தில் பேசிய திருவண்ணாமலை கலெக்டரின் வீடியோ வைரல்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் பேசிய விவசாய சங்க பிரதிநிதி ஒருவர், கோரிக்கைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என ஒட்டுமொத்த அதிகாரிகளையும் சரமாரி குற்றம் சாட்டினார். இதனால் டென்ஷன் ஆன கலெக்டர், ‘மாடு மாதிரி உழைத்து கொண்டிருக்கோங்க நாங்க. நீங்க பொதுவா சொன்னா என்ன அர்த்தம். நீங்க ஏதோ பேசணும்னு பேசிக்கிட்டு இருக்கீங்களா?’ என்றார். அப்போது குறுக்கிட்ட விவசாயி, ‘கோவப்படாதீங்க’ என்றார்.

அதற்கு கலெக்டர், ‘இல்லை நான் கோவப்படவில்லை. நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க. என்னுடைய அதிகாரிகள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு எனக்கு தெரியும். மூன்றரை மணிக்குதான் நாங்க சாப்பிட போறோம். நீங்க ஒன்றரை மணிக்கு சாப்பிட்டு வந்து இருப்பீங்க. எங்க ஆளுங்க மூன்றரை, 4 மணிக்கு சாப்பிட போறாங்க. பெரிய குற்றச்சாட்டு சொல்லறதுல நாக்குல நரம்பு இல்லாம பேசாதீங்க. நான் உச்சக்கட்டத்துக்கு கோவப்படுவேன்.

என்னுடைய அதிகாரிகள் தப்பு பண்ணா நான் திட்டுவேன். ஆதாரம் இருந்தா கொடுங்க நடவடிக்கை எடுப்பேன். நாங்க என்ன வேலை வெட்டி இல்லாமல் இங்கு உட்கார்ந்து இருக்கோமா? அவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு, எல்லோரும் உங்களுக்காகதான் இங்கு உட்கார்ந்துட்டு இருக்கோம்.உங்க கிட்ட திட்டு வாங்குறதுக்கும் பேச்சு வாங்குறதுக்கும்தான் இங்கு உட்கார்ந்துட்டு இருக்கோமா நாங்க. இரவு நேரம் பார்க்காம வேலை செய்யுறாங்க. நான் 6 மாசமாக சுகர் வந்து பாடுபட்டு கொண்டிருக்கிறேன்.

எத்தனை பேருக்கு சுகர் இருக்கு. எத்தனை இன்ஜினியர்கள் இறந்து போய் இருக்காங்க பிபி வந்து. எனக்கு தெரியும். நான் மற்ற கலெக்டர் மாதிரி இல்லீங்க. நான் எமோஷனான ஆளு. வேலை செய்யாவிட்டால் அதிகாரிகளை நான் திட்டுவேன். ஆனா நீங்க குறிப்பிட்டு சொல்வதை என்னிடம் சொல்ல வேண்டும். நீங்க பொதுவா என்னுடைய அதிகாரிகளை என் முன்னாடியே ஒட்டுமொத்தமா குறை சொன்னா என்ன அர்த்தம்’ என்று உணர்ச்சி பெருக பேசினார்.

அதற்கு விவசாய சங்க பிரதிநிதி குறுக்கிட்டு பேச வந்தார். அதற்கு கலெக்டர், ‘நீங்க பேசாதீங்க. யாராவது இங்கு அவர் பேசியதை ரெக்கார்டு செய்திருந்தால், அவருக்கு போட்டு காட்டுங்கள். அவரு என்ன வார்த்தை பேசினார் என்று தெரியும்’ என்றார். தொடர்ந்து மற்ற விவசாயிகள் பேசுங்கள் என கலெக்டர் கூறினார். தவறு செய்யும் அதிகாரியை மட்டும் குறிப்பிட்டு சொல்லாமல், ஒட்டுமொத்த அதிகாரிகளையும் குறை சொல்ல வேண்டாம் என கலெக்டர் உணர்ச்சி பெருக பேசி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post அதிகாரிகள் நடவடிக்கை இல்லை என விவசாயி புகார்: சாப்பிடாமல் கூட வேலை செய்கிறோம் ஒட்டுமொத்தமாக குறை சொல்லாதீர்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruvanamalai ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே...