×

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய சேப்பாக்கத்தை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மலேசியாவிற்கு கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் சேப்பாக்கத்தை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த அம்ஜத்கான் என்பவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவிற்கு போதைப் பொருள் கடத்த உள்ளதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சென்னை விமான நிலையத்தில் 2019 ஜூலை 24ம் தேதி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, மலேசியா செல்ல வந்த அம்ஜத்கானின் உடைமைகளை சோதனையிட்ட போது, அலுமினிய தாளில் சுற்றப்பட்ட 9 பிளாஸ்டிக் பைகளில் ஒரு கிலோ 530 கிராம் எடையுள்ள ஜெல்லி மிட்டாய் வடிவில் ஹாசிஷ் என்கிற எண்ணெய் வடிவிலான போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து போதைப்பொருளையும், 76 ஆயிரத்து 939 ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்ததுடன், இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.செல்லதுரை ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அம்ஜத்கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய சேப்பாக்கத்தை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chepak ,Malaysia ,Chennai ,Chepakkam ,Malaysia, ,
× RELATED விமானத்தில் புகைபிடித்த...