×

காங். வேட்புமனுக்களை நிராகரிக்க பாஜ சதி: டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

பெங்களூரு: முதல்வர் அலுவலக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்கும் சதியும் நடந்துள்ளது. முதல்வர் பொம்மையின் தொலைபேசி அழைப்பு பட்டியலை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஆளும் பாஜ, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதே போல் கட்சி மாறும் படலமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு சதாசிவாநகரிலுள்ள காங்., கட்சி தலைவர் டிகே சிவகுமார் இல்லத்தில் நடந்த நிகழ்வில் பாஜ தலைவர் சிவானந்த பாட்டீல், கல்யாண் கர்நாடகாவைச் சேர்ந்த அரவிந்த் சவுகான் உள்ளிட்ட பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்த தலைவர்களுக்கு டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சி கொடியை அணிவித்து அவர்களை கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து டிகே சிவக்குமார் அளித்த பேட்டியில், ‘‘கர்நாடக மாநிலத்தில் அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. இந்த மாற்றத்தில் அனைவரும் எங்களுடன் கைகோர்த்து மதவாத கட்சியை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். பாஜ மற்றும் முதல்வர் அலுவலக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்கும் சதி நடந்துள்ளது. முதல்வர் அலுவலகத்தின் தொலைபேசி அழைப்பு பட்டியலை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும். அப்படி பரிசீலனை செய்தால் பாஜவின் சதிகள் வெளிப்படும். சதாட்டி எல்லம்மா தொகுதி பாஜ வேட்பாளர் வேட்பு மனுவில் பிழை இருந்துள்ளது. அந்த மனு நிராகரிப்பு செய்யப்பட வேண்டிய நிலையில், முதல்வர் அலுவலகம் தேர்தல் அதிகாரிகளை அழைத்து அழுத்தம் கொடுத்துள்ளது. அது மட்டும் இன்றி கனகபுராவில் எனது வேட்புமனுவை நிராகரிக்கவும் பாஜ முயன்றது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். தகுதியான வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்’’ என்றார்.

* ஹெலிகாப்டரில் சோதனை காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், அவரின் மனைவி உஷா, மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோர் பெங்களூருவில் இருந்து தென்கனரா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக தனி ெஹலிகாப்டரில் சென்றிருந்தனர். தர்மஸ்தலாவில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதும், தேர்தல் அதிகாரிகள் ஹெலிகாப்டரை சோதனை செய்ய முன்வந்தனர். அப்போது ஹெலிகாப்டர் பைலட், இது தேர்தல் பிரசாரத்திற்காக கொண்டு வரவில்லை. இது தனியார் சார்பில் கொண்டு வரப்பட்டது. இது குறித்த தகவலும் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார். இருப்பினும் ஹெலிகாப்டர் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

The post காங். வேட்புமனுக்களை நிராகரிக்க பாஜ சதி: டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Cong. ,D. K.K. Sivamar ,BENGALORU ,Congress ,Kong. Baja ,D. K.K. Sivagamar ,
× RELATED காங்.,மாவட்ட தலைவரின் தந்தை மறைவு செல்வப்பெருந்தகை நேரில் அஞ்சலி