×

பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது: 2 செயற்கைகோள்களும் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது

சென்னை: பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இரண்டு செயற்கை கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

டெலியோஸ்-2 செயற்கைகோள் பிரதான செயற்கை கோளாகவும், லுமிலைட்-4 என்கிற நானோ செயற்கை கோளும் பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்பப்பட்டது. இரண்டு செயற்கை கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதைதில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோவின் வர்த்தக ரீதியான திட்டங்களை செயல்படுத்தும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் சிங்கப்பூர் உடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி டெலியோஸ் செயற்கைக்கோள்களை இஸ்ரோவின் ராக்கெட்டுகளால் விண்ணில் ஏவப்படுகின்றன. ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015ம் ஆண்டு டிச.16ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.

டெலியோஸ் – 2 செயற்கைகோள், சிங்கப்பூர் அரசுக்காக உருவாக்கப்பட்ட டெலியோஸ்-2 செயற்கைகோள் 741 கிலோ எடை கொண்டது இந்த செயற்கை கோள் புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு, வானிலை உள்பட பல்வேறு பணிகளுக்கு இதன் மூலம் தகவல்களை பெற முடியும். இதில் உள்ள அதிநவீன ரேடார் இரவு நேரங்களிலும் புவியின் மேற்ப்பரப்பின் படங்களை தெளிவாக எடுக்க முடியும் என கூறப்படுகிறது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உருவாகியுள்ள லூமிலைட் -4 என்கிற நானோ செயற்கைக்கோள் 16 கிலோ எடை கொண்டது. விண்ணின் தரவுகளை மறுஆக்கம் செய்வதற்கும், தொலை தொடர்புக்காக இந்த நானோ செயற்கைக்கோளிலுள்ள பஸ் பார் செயல்படும். நேவிகேஷன் என அழைக்கப்படும் இட தரவுகள் குறித்து அறிந்து கொள்ளவும், கடலில் கப்பலுக்கு வழி காட்டவும் உதவும் என கூறப்படுகிறது.

இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின் இஸ்ரோ தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியதாவது: இது பிஎஸ்எல்வி யின் 57வது ராக்கெட், 5வது வணிகரீதியான ராக்கெட். இதுவரை 400க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பி உள்ளது. இதுவரை உலக அளவில் அதிக செயற்கை கோள்களை விண்ணில் விலை நிறுத்திய வெற்றிகரமான ராக்கெட் என்கிற பெருமையை பிஎஸ்எல்வி பெற்றுள்ளது. இன்று சோதிக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்வி புவிவட்டப்பாதை சோதனை கருவி (PSLV orbital Experimental Module-2(POEM)) விண்வெளி ஆய்வில் முக்கியமான பங்கு வகிக்கும். மொத்தம் 7 சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதிகபட்சமாக ஒரு மாதம் செயல்பாட்டில் இருக்கும். அதற்குள் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். ராக்கெட்டில் 4வது ஸ்டேஜ் பயணத்தின் போது இந்த பிஓஇஎம் அமைப்பு, சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளும். ஒரு வருடம் இதன் ஆயுட்காலம் நீடித்தால், மேலும் பல பயனுள்ள தகவல்களை பெறலாம். ஆதித்யா, சந்திராயன் 3, நாவிக் போன்ற முக்கிய திட்டங்கள் அடுத்து வரும் 3 மாதங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் போன்றவற்றை நடத்த திட்டமிட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்திய ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தும் திட்டம் இரண்டாம் கட்ட சோதனை முயற்சியில் உள்ளது.

ஆர்பிட்டல் ரிகவரி வாகனம் என்ற திட்டம் மூலம் ராக்கெட்டுகளை சுற்றுவட்டபாதையில் ஒரு வருடம் வரை நிலைநிறுத்தி பின்னர் அதை திருப்பி கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சி பணிகள் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்படுகிறது.ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை சோதனை முயற்சியாக திட்டம் 12 முதல் 16 கிலோமீட்டர் வரை விண்ணில் செலுத்தி மீண்டும் புவியில் இறக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த சோதனை திட்டம் தோல்வியில் முடிந்தால் ஆட்களை மீட்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வரும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தபட உள்ளது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜிஎஸ்எல்வி மாக் 3 மூலம் ஆளில்லா செயற்கொள் அனுப்பட உள்ளது. அதற்கான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* குலசேகரபட்டினத்தில் 2 ஆண்டில் பணி முடியும்

இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், ‘‘குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது, இரண்டு ஆண்டுகளில் முழு பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். ரேடார், உட்கட்டமைப்பு பணிகள், அனைத்து வசதிகள், குடியிருப்பு என பல கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் அதற்கான பணிகள் முடிக்கப்படும். சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையம் இதனை கண்காணிக்கும்’’ என்றார்.

The post பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது: 2 செயற்கைகோள்களும் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Andhra State… ,Dinakaran ,
× RELATED ஆந்திரா மாநிலம் சித்தூர்...