×

ஆலங்குடி, திட்டை, சூரியனார் கோயில்களில் இன்று நள்ளிரவு குருப்பெயர்ச்சி விழா: மீனத்தில் இருந்து மேஷத்துக்கு பிரவேசம்

வலங்கைமான்: குரு பகவான் இன்று இரவு 11.24 மணியளவில் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோயிலான ஆபத் சகாயேஸ்வரர் கோயிலில் இன்றிரவு குருப்பெயர்ச்சி விழா விமர்சையாக நடக்கிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கலங்காமற் காத்த விநாயகர், ஆபத் சகாயேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஏலவார்குழலி அம்மன், சனீஸ்வர பகவான் ஆகிய சுவாமிகள் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். குரு பகவான் தங்க கலசத்தில் காட்சியளிப்பார்.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி ஆலங்குடி குருபரிகார கோயிலில் இன்று காலை குருபரிகார யாகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரமும், தங்க காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு கடந்த 16ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை 2வது கட்ட லட்சார்ச்சனை நடக்கிறது. மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் ரூ.400 கட்டணமாக செலுத்தி கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம்.

திட்டை, சூரியனார்கோயில்: தஞ்சை மாவட்டம் திட்டை வசிஸ்டேஸ்வரர் கோயில், கும்பகோணத்தை அடுத்த சூரியனார் கோயில்களிலும் இன்று இரவு 11.24 மணியளவில் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் யாகங்களும் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர். குருபெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி, திட்டை மற்றும் சூரியனார் கோவில் உள்ளிட்ட கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

The post ஆலங்குடி, திட்டை, சூரியனார் கோயில்களில் இன்று நள்ளிரவு குருப்பெயர்ச்சி விழா: மீனத்தில் இருந்து மேஷத்துக்கு பிரவேசம் appeared first on Dinakaran.

Tags : Alangudi ,Tutta ,Suryanar ,Eve ,Pisces ,VALANKAYMAN ,Guru ,Meena zodiac ,Mesha zodiac ,Aalangudi ,Putta ,Sunyanar ,Aries ,
× RELATED பாம்பன் சுவாமிகள் கோயில்,...