×

களக்காடு பகுதியில் குடிநீருக்காக ஊருக்குள் புகும் கடமான்களை வேட்டையாடும் செந்நாய்கள்: வனப்பகுதியில் தண்ணீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

களக்காடு: களக்காடு பகுதியில் குடிநீருக்காக ஊருக்குள் வரும் வனவிலங்குகளை செந்நாய்கள் கூட்டம் வேட்டையாடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு வாழும் புலி, சிறுத்தை, கரடி, யானை, கடமான், செந்நாய், காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் களக்காடு மலைப்பகுதியில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. அதிக வெப்பம் நிலவுவதால் அருவி, நீரோடைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதுபோல மரங்களும் காய்ந்து கிடக்கிறது. இதையடுத்து வனவிலங்குகள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் மலையடிவார கிராமங்களில் புகுவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடமான்கள், செந்நாய்கள் கூட்டமும் அதிகளவில் மலையடிவார பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளதாக கூறப்படுறது. இவ்வாறு குடிநீர் தேடி வரும் கடமான்களை செந்நாய்கள் கூட்டம் வேட்டையாடி கொன்று, தின்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மானை வேட்டையாடும் செந்நாய்கள் விவசாயிகளை தாக்கும் சூழல் நிலவுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

களக்காடு மலையடிபுதூருக்கு மேற்கே உள்ள தாமரைகுளத்திற்கு தண்ணீர் அருந்த வரும் கடமான்களை செந்நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதனால் கடமானின் உடல் பாகங்கள் சிதறி கிடக்கின்றன. வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதியில் கோடை காலங்களில் வனவிலங்குகள் நீர் அருந்த குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் தண்ணீர் நிரப்பி வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று இயற்கை நல ஆர்வலர்கள் வனத்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.

The post களக்காடு பகுதியில் குடிநீருக்காக ஊருக்குள் புகும் கடமான்களை வேட்டையாடும் செந்நாய்கள்: வனப்பகுதியில் தண்ணீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Khalakad ,GALLEGADA ,Khalakadam ,Nelly District Kalakadam ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...