×

நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட உழவர்களின் கனவான நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னும் கனவாகவே தொடருகிறது. நந்தன் கால்வாயில் அவ்வப்போது சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், அவை எதுவும் நந்தன் கால்வாய் பாசனப் பகுதிகளின் தேவையையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மையாகும்.

திருவண்ணாமலை மாவட்டம், கவுத்தி மலையில் உருவாகும் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே கீரனூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகள் என மொத்தம் 36 ஏரிகளை நிரப்பி, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தித் தருவது தான் நந்தன் கால்வாய் திட்டம் ஆகும். கீரனூர் அணையும், கால்வாய்களும் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிதைந்து விட்ட நிலையில், 1972-ஆம் ஆண்டில் தான் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.கோவிந்தசாமி வேளாண்துறை அமைச்சராக இருந்த போது, அதை சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். ஆனால், அடுத்த சில மாதங்களில் அவர் காலமாகி விட்டதால் பணிகள் நிறைவடையவில்லை.

மற்றொருபுறம் நந்தன் கால்வாய் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். கீரனூர் அணையில் தொடங்கும் நந்தன் கால்வாய் பனைமலை ஏரியில் முடியும் வரை சில இடங்களில் மட்டும் கால்வாய் மீது சிமிட்டி பூச்சு பூசப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டும் கால்வாய்க் கரைகள் மீது தார்ச்சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. பிற இடங்களில் மண் பூச்சும், மண் சாலைகளும் தான் உள்ளன. இந்த நிலையை மாற்றி கால்வாயின் தொடக்கம் முதல் இறுதி வரை சிமிட்டி பூச்சும், தார் சாலைகளும் அமைக்கப்பட வேண்டும்.

நந்தன் கால்வாயில் பல இடங்களில் செய்யப்பட்டுள்ள வன்கைப்பற்றல்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். நந்தன் கால்வாய் தொடக்கம் முதல் இறுதி வரை உள்ள 37.60 கி.மீ நிலப்பரப்பும் ஒரு மாவட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும். மேற்கண்ட அனைத்துக் கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். இதை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி விரைவில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Nandan ,Ramdas ,CHENNAI ,BAMA ,Ramadas ,Tiruvannamalai, Villupuram district ,Ramadas' ,Dinakaran ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...