×

ரசிகர்கள் தரும் அன்பும் பாசமும் அசாத்தியமானது; எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்: வெற்றிக்கு பின் கேப்டன் டோனி பேட்டி

சென்னை: 16வது ஐபிஎல் சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா 34 ரன் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறினார். 20 ஓவரில் ஐதராபாத் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன் மட்டுமே எடுத்தது.. ஜடேஜா 4 ஓவர் வீசி 22 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணியில் ருத்ராஜ் – கான்வே முதல் விக்கெட்டிற்கு 87 ரன் சேர்த்தனர். கான்வே இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 57 பந்தில் 77 ரன் எடுக்க 18.4 ஓவர்களில் சென்னை 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 7வது ஆட்டத்தில் 4வது வெற்றியை ருசித்து பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்குப் பிறகு சென்னை அணி கேப்டன் டோனி அளித்த பேட்டி: யார் என்ன பேசினாலும், நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். இதை நான் எஞ்சாய் செய்வது மிக முக்கியம். சென்னை மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் கொடுக்கும் அன்பு மற்றும் ஆதரவு என்னை நன்றாக உணர வைக்கிறது. பத்திரனா சிறப்பாக பந்துவீசினார். அவரது பந்துவீச்சு ஆக்சன் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கும். குறிப்பாக லைன் மற்றும் லென்த் இரண்டிலும் துல்லியமாக இருப்பதால் அவரின் ஓவரில் ரன்கள் அடிப்பது கடினம். அவர் ஒரு சிறந்த தேர்வு.

இரண்டாவது பேட்டிங் எடுப்பதற்கு சற்று தயக்கமாக இருந்தேன். ஏனெனில் இன்றைய போட்டியின் இரண்டாம் பாதியில் ஈரப்பதமாக இருக்காது என்று உணர்ந்தேன். ஏனெனில் இங்கு மேகமூட்டமாக இருந்தது. ஆனாலும் நம்பி எடுத்தேன். ஸ்பின்னர்கள் உள்ளே வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்து முடித்தனர்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் மிடில் ஓவர்களில் பவுலர்கள் செயல்பட்ட விதம்தான். கடைசி சில ஓவர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அபாரமாக செயல்பட்டார்கள். பவுலர்களுக்கு நான் வலியுறுத்துவது என்னவென்றால், முதலில் அவர்கள் எந்த பந்தை வீசுகிறார்கள் என்பதை பொறுத்து அவர்களே வீரர்களை நிறுத்த வேண்டும். அதை அவர்களிடம் விட்டுவிடுவேன். அதன் பிறகு தான் நான் செயல்படுத்துவேன். நானாக முன்வந்து இதை செய்வதில்லை.

நான் பிடித்த கேட்ச் சிறந்தது தான். ஆனால் எனக்கு சிறந்த கேட்ச் விருது கொடுக்கவில்லை. ஏனெனில் எங்களிடம் கிளவுஸ் இருக்கிறது. அதனால் எளிதாக பிடித்து விட்டோம் என்று கருதி விடுகிறார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு ராகுல் டிராவிட் கீப்பிங் செய்தபோது இது போன்ற ஒரு கேட்ச்சை அவர் எடுத்தார். மேலும் கீப்பிங்கில் இதுபோன்ற கேட்ச் எடுப்பது எளிதல்ல. நன்கு அனுபவம் இருந்தால் மட்டுமே எடுக்க முடியும். இவ்வாறு கூறினார்.

160 ரன் அடித்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் “தோல்வியடைந்த அணியாக இருப்பது வருத்தமளிக்கிறது. இந்த பிட்ச்சில் 130 ரன் அடித்தால் போதாது. 160 ரன் அடித்திருக்க வேண்டும். இந்த இடத்தில் சிஎஸ்கே பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். எனது பாராட்டுக்கள். எங்களது பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. சிஎஸ்கே பவுலர்கள் இந்த மைதானத்தில் எப்படி செயல்படுவார்கள் என்று நன்றாக உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் திட்டத்தை வகுத்து இங்கு வந்தோம். ஆனால் சிஎஸ்கே பவுலர்களுக்கு தாக்கம் கொடுத்து, அவர்களது பவுலிங்கில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து, பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டோம். எங்களது திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம்’’ என்றார்.

ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு அளப்பரியது: ஆட்டநாயகன் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில், “சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவது தனி மகிழ்ச்சி மற்றும் இந்த மைதானத்தில் பந்துவீசுவது மிகவும் பிடித்த விஷயமாக மாறிவிட்டது. இந்த பிட்ச் எப்படி நடந்து கொள்ளும், எந்த இடத்தில் டர்ன் ஆகும் என்பதையும் நன்றாக புரிந்து கொண்டேன். அதற்கேற்றவாறு பவுலிங் செய்தேன். இங்கு என்ன செய்யக்கூடாது என்பதையும் நன்கு அறிவேன். ஸ்டம்ப்பை விட்டு நகராமல் பந்துவீசினால் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். அதை வைத்து தாக்கம் ஏற்படுத்தலாம். மேலும் சிஎஸ்கே ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு அளப்பரியது. வெற்றியோ தோல்வியோ அவர்களது ஆதரவில் எந்தவித மாற்றமும் இருக்காது” என்றார்.

The post ரசிகர்கள் தரும் அன்பும் பாசமும் அசாத்தியமானது; எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்: வெற்றிக்கு பின் கேப்டன் டோனி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tony Petty ,Chennai ,16th ,IPL ,Chepakkam stadium ,Chennai Super Kings ,Hyderabad ,Tony ,Dinakaran ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு தமிழ்நாடு...