×

ஜல்ஜீவன் திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றம்: காஞ்சி. கலெக்டருக்கு விருது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தை 100 சதவீதம் நிறைவேற்றிய கலெக்டர் ஆர்த்திக்கு, பிரதமர் மோடி விருது வழங்கி கவுரவித்தார். ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக ஒன்றிய அரசின் பிரதமர் விருது காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு வழங்கப்பட்டது.

இதற்காக டெல்லியில் நடைபெற்ற விழாவில், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு, பிரதமர் மோடி விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம் துவங்கியபின் புதிதாக 1.16 லட்சம் இணைப்பு கொடுக்கப்பட்டு, மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுதுமாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் திட்டப்பணிகள் முடிவடைந்தன. குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.

இவர்கள், அவ்வப்போது குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர். கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த குழு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்வதை கண்காணிக்கவேண்டும். பைப் லைன் பழுது, சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஜல்ஜீவன் திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றம்: காஞ்சி. கலெக்டருக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Jaljeevan ,Kanchi ,Kanchipuram ,Modi ,Collector ,Aarti ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி