×

தகதகக்கும் ‘சுள்’ வெயிலை சமாளிக்க நீர்நிலைகளை தேடி வரும் வனவிலங்குகள்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

வருசநாடு/மூணாறு: தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கி கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க நிழல் தேடி அலையும் சூழல் நிலவுகிறது. ஐஸ் வாட்டரை குடிக்க மனிதர்கள் தவித்து கொண்டிருக்கும் நிலையில் வனவிலங்குகள், கால்நடைகளின் நிலையை நினைத்து பார்க்கும் போது கவலையை ஏற்படுத்துகிறது. தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும் குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வர துவங்கி விட்டன. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தேனி மாட்டத்தில், தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம், வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது. எனவே வனத்துறையினர் தலையிட்டு வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனங்களில் கொண்டு சென்று விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஹைவேவிஸில் யானைகள் ‘ஜாலி உலா’
சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் இயற்கை அழகோடு சொர்க்க பூமியாய் ஏழுமலை கிராமங்களை கொண்டு ஹைவேஸ் பேரூராட்சி உள்ளது. இங்கு பிரதானமாக சுமார் 20,000 ஏக்கரில் ஏழுமலை கிராமங்களில் தேயிலை சாகுபடியும், பிற பகுதிகளில் ஏலம், காபி, மிளகு, ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்களும் வாசனை திரவியங்களாய் தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்த ஹைவேவிஸ் பேராட்சியின் மலை வரிசையில் மேகமலை, மணலார், மேல் மணலார், வெண்ணியார், மகராஜன் மெட்டு, இரவங்கலார், மற்றும் ராஜா அந்துவான், கடனா, ஆனந்தா, அடுக்கம்பாறை, சில்வர் குடுசு, கலெக்டர் காடு உள்பட காப்பி தோட்டங்களாக இருப்பதால் எங்கு பார்த்தாலும் வானுயர்ந்த மரங்கள், அடர்த்தியான இயற்கை எழில் கொஞ்சம் பச்சை பசேல் என தோட்டங்களும் நெருக்கமாக இருப்பதால் வருடம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்கும்.

இந்த மலைப்பகுதிகளில் யானை கூட்டங்களும், சிறுத்தை மற்றும் வரிப்புலிகள், காட்டு மாடுகள், வரிக்குதிரை கள், அரிய வகை பாம்பு இனங்கள், சிங்கவால் குரங்குகள், கருஞ்சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல உயிரினங்கள் 1.50 ஏக்கர் அளவில் சின்னமனூர் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் வனத்திற்குள் வாழ்கின்றன. தற்போது வெயில் கொளுத்தி வருவதால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து நீர்நிலைகளை தேடி வருகின்றன. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஹைவேவிஸ், தூவானம், வெண்ணியார், மணலார், இரவங்கலார் ஏரி மற்றும் அணைகளுக்குள் இறங்கி தண்ணீர் குடிக்கின்றன. குறிப்பாக யானைகள் வெண்ணியாறு அணையில் ஒற்றையாகவும், கூட்டமாகவும் அடிக்கடி வந்து தாகம் தீர்த்து செல்கின்றன. எனவே, பொதுமக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

காட்டு யானைகள் ‘ஜில் குளியல்’
கேரளா மாநிலம் மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் யானைக்குளம் உள்ளது. கோடை காலத்தில், இந்த குளத்திற்கு காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் பருகி, குளியல் போட்டு செல்வது வழக்கம். இந்த குளத்தையொட்டியுள்ள மலையாற்றூர் வனப்பகுதியில் யானை, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வற்றி வருகின்றன. இந்நிலையில், இந்த யானைகுளத்திற்கு நேற்று மாலை 20க்கும் யானைகள் ஒரே நேரத்தில் வந்தன. இதில் 6 குட்டிகளும் இருந்தன.

இவை ஒன்றையொன்று மோதிக் கொண்டும், தண்ணீரில் நீச்சல் அடித்து குளிப்பதும், அங்கிருந்த சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இனி 3 மாதங்களுக்கு மாலை நேரங்களில் யானைக்குளம் யானைகளின் குளியல்தொட்டியாக மாறி விடும். இங்கு வரும் யானைகளை சுற்றுலாப்பயணிகள் காண வனத்துறையினர் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சுமார் 10 மீட்டர் தூரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகளை ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர்.

காட்டுத்தீயால் இடம்பெயரும் விலங்குகள்
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்காலங்களில் பெரியகுளம் பகுதியில் அடுக்கம்-கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் போடிமெட்டு மலைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டும். அதுபோல், கோடைக்காலங்களில் மூணாறு, போடி குரங்கணி போன்ற மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதும் தொடர்கதையாக உள்ளது.

இதனால், விலை உயர்ந்த தேக்கு, சந்தனம், மருது, கருங்காலி, செங்கருங்காலி உள்ளிட்ட மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. மேலும், இப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. தற்போது வெயில் காலம் தொடங்கிய நிலையில் வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ பரவுவதால், அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், விவசாய நிலங்களுக்கு வனவிலங்குகள் படையெடுத்து வருகின்றன.

The post தகதகக்கும் ‘சுள்’ வெயிலை சமாளிக்க நீர்நிலைகளை தேடி வரும் வனவிலங்குகள்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Varanadu ,Moonaru ,Tamil Nadu ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...