×

இந்த வார விசேஷங்கள்

உய்யக்கொண்டார் அவதாரம் 22.4.2023 சனி

வைணவத்தில் ஆழ்வார்கள் ஆச்சாரர்களின் மறைவு தினத்தை (தீர்த்தம்) விட அவதார தினத்தை மிகவும் விசேஷமாகக் கொண்டாடுவார்கள். இதை அவரவர்கள் இல்லங்களிலும் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இன்றைய தினம் சித்திரை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம்.

ரங்கத்திற்கு அருகில் உள்ள திருவெள்ளறை என்னும் தலத்தில் நாதமுனிகளின் சீடராக அவதரித்தவர் உய்யக் கொண்டார். இவரும் குருகை காவலப்பன் என்கின்ற சீடரும் நாதமுனிகளின் மிகமிக முக்கியமான சீடர்கள்.
இவருடைய இயற்பெயர் புண்டரிகாட்சன். நாதமுனிகள் யோகத்தில் சிறந்தவர். அவர் ஆழ்வார்களின் 4000 பாசுரங்களும் பெற்ற பிறகு உய்யக்கொண்டாரிடம். ‘‘உனக்கு யோகக் கலை வேண்டுமா? இல்லை ஆழ்வார்களின் தமிழ்க்கலை வேண்டுமா?’’ என்று ஒரு கேள்வி கேட்டார்.

உடனே உய்யக் கொண்டார், ‘‘தனி ஒருவன் மோட்சத்துக்கு போகும் யோகக் கலை எனக்கு வேண்டாம். எல்லோரையும் நல்ல முறையில் திருத்தி, தமிழ்ச்சுவையை ஊட்டி, இறை நெறியைப் புகட்டி, அவர்கள் வாழ்வை நல்லபடியாக அமைக்கக்கூடிய ஆழ்வார்களின் பாசுரங்களை எனக்கு நீங்கள் அர்த்தத்தோடு அருளிச் செய்ய வேண்டும்’’ என்று கேட்டார்.

அப்பொழுதுதான் அவரை நாதமுனிகள், “இந்த உலகம் வாழும்படியாக இருக்கிறவரே’’ என்கிற பொருளில், `உய்யக் கொண்டார்’ என்று பெயர்சூட்டினார். அதன் பிறகு இயற்பெயர் மறைத்து இந்தப் பெயரே பிரபலமாகியது. நாத முனிகளுக்குப் பிறகு இவர் வைணவ சமயத்தை வளர்த்து வந்தார்.

அவருக்கு அடுத்து வந்த மணக்கால் நம்பியிடம் வைணவ நிர்வாகத்தைக் கொடுத்து, நாதமுனிகளின் பேரனான ஆளவந்தாரை வைணவ சமய தலைமைக்கு வளர்க்கும்படி கட்டளையிட்டார். அவருடைய திரு நட்சத்திரம் இன்று.

மங்கையர்க்கரசியார் குருபூஜை 23.4.2023 – ஞாயிறு

மங்கையர்க்கரசியார், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டு இளவரசி மங்கையர்க் கரசியார். மதுரை பாண்டியனை (நின்ற சீர் நெடுமாறன்) மணந்தார். அப்பொழுது பாண்டிய நாடு சமணம் தழுவி இருந்தது.

அரசனும், சமணத்தைப் பின்பற்றி இருந்தான். சைவத்தை தனது தவநெறியாகப் பின் பற்றிய மங்கையர்க்கரசி, பாண்டி நாட்டில், மீனாட்சி அம்மன் திருக்கோயில் இருக்கக்கூடிய கூடல்நகரில், சைவநெறி தழைக்க வேண்டும் என்று விரும்பினார்.

குலச்சிறையார் என்கின்ற சைவப்பெரியாரை துணைகொண்டு, திருஞான சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தார். அப்பொழுது இறைஅருளால் பாண்டிய மன்னனுக்கு கடுமையான சூலைநோய் வந்தது.
அந்த நோயை சமணர்களால் தீர்க்க முடியவில்லை. அப்பொழுது திருஞான சம்பந்தர்,

மந்திர மாவது நீறுவானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறுதுதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறுசமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.

என்ற திருநீற்றுப் பதிகம் பாடி மன்னனின் நோயைத் தீர்த்தார். அதனால், மகிழ்ந்த மன்னன் சம்பந்தரின் அறிவுரை கேட்டு, சைவத்துக்கு மாறினான். அதற்கு உதவியவர் மங்கையர்க்கரசி. தனது விடா முயற்சியினாலும், வேண்டுதலாலும், பொறுமையாலும், தெய்வக் குழந்தையும் ஞானக் குழந்தையுமான திருஞானசம்பந்தரின் பேரருளாலும் மெல்ல மெல்ல மதுரையை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றினார். இப்போது உள்ள சம்பந்தர் திருமடம் அப்போது ஏற்பட்டதுதான். இதற்குக் காரணம் மங்கையர்க்கரசி. அவருடைய குரு பூஜை தினம் இன்று.

அட்சய திருதியை 23.4.2023 – ஞாயிறு

நேற்று சனிக்கிழமை காலை 9:15 மணிக்கு மேல் திருதியை வந்துவிட்டது. அட்சய திருதியை புண்யகாலம் தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல குரு பெயர்ச்சியும் நடந்து இருக்கிறது. சிரார்த்த திதி நேற்றுதான் என்பதால், அட்சய திருதியை முன்னிட்டு தர்ப்பணங்கள் எல்லாம் நேற்று செய்ய வேண்டும். நேற்றைய நாள் (22.04.2023) கிருத்திகை விரதம்.

இன்று அட்சய திருதியை விரதம். அவரவர்கள் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும். எது எப்படி இருந்தாலும், அக்ஷய திருதியை பூஜையை இன்று ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டும். நேற்றைய தினம் புண்ணிய காலம் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை பூஜா காலம். அட்சய திருதியை திதியில் எந்த நல்ல காரியம், மற்றும் பூஜை பலன்களும் பெருகும்.

சித்திரை மாதத்தில் மிக விசேஷமான ஒரு திதி வளர்பிறையில் வரும் திருதியை. இந்தத் திருதியை திதியில்தான் பெருமான் மச்ச அவதாரம் எடுத்தார். சோமுகாசுரன் என்கிற குதிரை முகம் கொண்ட அசுரனை அழித்து வேதங்களை மீட்டெடுத்தார். எனவே பெருமாளுக்கு மிகவும் உரிய இந்த அக்ஷய திருதியை நாளில், துவங்கப்படும் எந்தக் காரியங்களும் வளர்பிறை போல் வளர்ந்து நிறைவான பலனைக் கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.  அன்றைய தினம் நாம் பொருள் வாங்கினால் அது பன்மடங்கு வளரும் என்கிற நம்பிக்கையில், தங்கம், வெள்ளி, போன்ற பொருட்களை வாங்குகின்றோம்.

அதைவிட எது வளர்ந்தால் நமக்கு எல்லா சௌபாக்கியங்களும் கிடைக்குமோ அது வாங்க வேண்டும். அதாவது தானம் செய்து புண்ணியங்களை வணங்க வேண்டும். அட்சய திருதியை அன்று நாம் பித்ரு தர்ப்பணம் செய்து, தானங்களைச் செய்ய வேண்டும். அன்று தயிர்சாதத்தை தானம் செய்தால், ஆயுள் பலம் அதிகரிக்கும். இனிப்புத்தானம் செய்தால், திருமணத் தடைகள் அகலும்.

கால்நடைகளுக்கு தீவனம் போட்டால் வாழ்வு வளம் பெறும். அன்று எந்த தானத்தையும் முழுமனதோடு செய்யலாம். அந்த தானம் அதனுடைய பலனை ஆயிரம் மடங்குகளாக வளர்ப்பதுதான் அட்சய திருதியை. எப்படி ஒரு சின்ன விதையானது இலைகளும் கிளைகளும் உடைய பெரிய விருட்சமாக வளர்ந்து, எல்லோருக்கும் பயன் தருகிறதோ, அதே போல உலக நன்மைக்காகவும், தனக்குரிய நன்மைக்காகவும், அன்றைக்கு செய்யப்படுகின்ற தானமானது பன்மடங்கு பெருகி இந்த உலகத்தை மிகுந்த செழிப்போடு வாழ வைக்கும். அட்சய திருதியை அன்று கும்பகோணம் வீதிகளில் 12 கருடசேவை மிகவும் சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார் திருநகரி சித்திரை பிரம்மோற்சவம் ஆரம்பம் 23.4.2023 – ஞாயிறு

108 திவ்ய தேசங்களில் ஒன்று. ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில். இக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் அவதாரத் தலம் இது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால், குருகூர் எனப்படுகின்றது.

கோவிந்த விமானம் என்கிற விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரது திருநாமம் ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் என்பதாகும். முதன்முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், ‘ஆதிநாதன்’ என்று அழைக்கப்பட்டார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சந்நதிகளில் உண்டு. நம்மாழ்வார் அவதரித்த தலம் இது. நம்மாழ்வாரின் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் மற்றும் தாயார் களைப் பிரதானப்படுத்திக்கொண்டாடப்படும் திருவிழா சித்திரை பிரம்மோற்சவம்.

இந்த ஆண்டு சித்திரை மாதம் எட்டாம் தேதி (21.04.2023) தொடங்குகின்றது. 23.4.2023 காலை 6.45 முதல் ஏழரை மணிக்குள் கொடியேற்றம். பின் திருமஞ்சனம். ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி எம்பெருமானார் எதிர்சேவை. 27-ஆம் தேதி புகழ்பெற்ற கருட சேவை உற்சவம். மே மாதம் ஒன்றாம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.

ஆதிசங்கரர் ஜெயந்தி 25.4.2023 – செவ்வாய்

ஈஸ்வரனின் அம்சமாகவே இந்த நிலவுலகம் வாழ வந்துதித்தவர் ஆதி சங்கரர். சித்திரை மாத அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை பஞ்சமியில், சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. “காலடி” யில் பிறந்த அவர் ‘‘காலடி” படாத இடம் பாரதத்தில் இல்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் நடந்து நடந்து, அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பினார். உலக உயிர்களின் உன்னதத்தை, அத்வைத தத்துவத்தின் அடிநாதமாக வழங்கியவர். அவருடைய பிரதான நோக்கம்

1. வேத தர்மத்தை காப்பது.
2. மனிதர்கள் ஒவ்வொருவரும் பிரம்மத்தை தங்களுக்குள் உணரச் செய்வது.

ஆதிசங்கரர் இந்து சமயத்தின் மூன்று முக்கிய நூல்களுக்கு (கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்ரம்), தனது தத்துவ விளக்கத்தை அளித்தார். ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து நிறைவேற்ற வேண்டிய மகத்தான காரியங்களை வெறும் 32 வயதில் செய்துமுடித்தார். ஏகம் என்பது பிரம்மம்.

அந்த பிரம்மத்தை அறியும் ஓர் அடையாளமாகவே ஏக தண்டத்தை ஏந்தி இந்திய சமய மரபின் பெரும் புரட்சிக்கு வித்திட்டார். தனக்குப்பின் அத்வைத தர்மத்தையும் தத்துவத்தையும் அகிலமெல்லாம் பரப்ப சிஷ்யர்களை உருவாக்கினார். ஆங்காங்கே பீடங்களையும், மடங்களையும் உருவாக்கினார்.

மனிதாபிமானமும், மனித சமத்துவமும் இல்லையேல், ஆன்மீகத்தின் அடித்தளம் அசைந்து விழுந்துவிடும் என்ற உண்மையை உரக்கச் சொன்னவர் ஆதிசங்கர பகவத்பாதர்.அத்வைதம் என்பது அகில உலகமும் பரந்துள்ள மகத்தான தத்துவம். அதனை வடிவமைத்தவர் அல்ல சங்கரர்; அகில உலகமெல்லாம் கொண்டு சேர்த்த உன்னதப் பணியைச் செய்தவர்.

சஷ்டி 26.4.2023 – புதன்

விரதங்களில் மிகச் சிறப்புடைய விரதம் சஷ்டி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற ஆறாவது திதி சஷ்டி திதி. முருகனுக்கு உரியது. அன்றைய தினம் காலை முதல் சாப்பிடாமல் உபவாசம் இருந்து, முருகனை வணங்கி வழிபட்டு, முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்து, விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

தொடர்ச்சியாக சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு தளர்ச்சியில்லாத தன்னம்பிக்கையும், வாழ்வில் தொடர் முன்னேற்றமும் ஏற்படும். குறிப்பாக குழந்தை இல்லாதவர்களுக்கு சஷ்டிவிரதம் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கை மக்களிடத்திலே இருக்கிறது. சட்டி (ஷ்டி)யில் இருந்தால் அகப்பையில் வரும் என்று சொல்லுவார்கள்.

கரு உருவாகாமல் பலவிதமான உடல் பிரச்னையால் தவிப்பவர்களுக்கு, இந்த கந்த சஷ்டி விரதம் மிகமிக பயனுள்ள விரதமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Uyyakondar ,Shani Vaishnavism ,Avatar Day ,Tirtha ,Dinakaran ,
× RELATED அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: அம்பையில் மாசி மகா ஊர்வலம்