×

தேவகோட்டை அருகே உலக நன்மை வேண்டி லட்ச தீபம் ஏற்றி வழிபாடு

 

தேவகோட்டை, ஏப்.22: தேவகோட்டை அருகே வெளிமுத்தியில் உள்ள பெரியநாயகி சமேத பழம்பதிநாதர் கோயிலில் உலக நன்மை வேண்டி பெண்கள், குழந்தைகள் ஒரு லட்சம் தீபம் ஏற்றி, சிறப்பு வழிபாடு நடத்தினர். தேவகோட்டை அருகே வெளிமுத்தி கிராமத்தில் மிகப் பழமையான பெரியநாயகி சமேத பழம்பதிநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பழங்காலத்தில் பாண்டிய மன்னருக்கு சிவபெருமானும் அம்பாளும் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் உலக நன்மை வேண்டியும், கொரோனா என்னும் கொடிய நோய் முற்றிலும் ஒழியவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி ஒரு லட்சம் தீபம் ஏற்றி பெண்களும், குழந்தைகளும் சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னதாக பழம்பதிநாதருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகம், கருவறை, மதில் சுவர், ஊரணி கரை முழுவதும் பெண்களும், குழந்தைகளும் தீபம் ஏற்றி வழிபட்டனர், அதில் லிங்கம், தேர், அகல் விளக்கு, ஓம், சூலம், நட்சத்திரம், சரவணபவ போன்ற வடிவங்களில் விளக்கேற்றினர், தொடர்ந்து வழிபாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post தேவகோட்டை அருகே உலக நன்மை வேண்டி லட்ச தீபம் ஏற்றி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Devakota ,Laksa ,Devakottai ,Periyanaiaki Sametha Palampathinathar temple ,Valamuthi ,
× RELATED தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்