×

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24ம் தேதி துவக்கம்

 

நாமக்கல், ஏப்.22: நாமக்கல் மாவட்டத்தில், எஸ்எஸ்எல்சி தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 3 மையங்களில், வரும் 24ம் தேதி துவங்குகிறது. 1032 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு, கடந்த 6ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வில் சமூக அறிவியல், அறிவியல், கணிதம் ஆகிய தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகள் கடினமாக இருந்தன. சமூக அறிவியலில் 8 மதிப்பெண் கேள்வி ஒன்று, புத்தகத்தின் உட்பகுதியில் இருந்து புதிதாக கேட்கப்பட்டுள்ளது. இதே போல், கணிதத்திலும் ஒரு மதிப்பெண் கேள்விகள் சில கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அந்த கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் எழுத முயன்றிருந்தால், மதிப்பெண் அளிக்கவேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு பிளஸ்2 மற்றும் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு கேள்வித்தாளில் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகள் சிபிஎஸ்இ கேள்வித்தாள் தரத்துக்கு இருந்ததாகவும், இதனால் இந்த ஆண்டு பெரும்பலான பாடங்களில் சென்டம் குறைவாகவே இருக்கும் என மூத்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு 300 பள்ளிகளை சேர்ந்த 10,891 மாணவர்கள், 9,750 மாணவியர் என மொத்தம் 20,641 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதியுள்ளனர். இந்த ஆண்டு, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் எஸ்ஆர்வி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில், எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்துக்கும் முகாம் அலுவலராக மூத்த தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவ, மாணவியரின் விடைத்தாள் மதிப்பீடு செய்ய, வேறு மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, இங்குள்ள 3 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1.22 லட்சம் விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவை பாட வாரியாக திருத்தும் பணி வரும் 24ம் தேதி துவங்குகிறது. வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள விடைத்தாள்கள், 3 மையங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 1032 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ராசிபுரம் மையத்துக்கு 312 பேர், திருச்செங்கோடுக்கு 360, நாமக்கல்லுக்கு 360 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர, கல்வித்துறை பணியாளர்கள் 114 பேர் விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். விடைத்தாளை திருத்த போதுமான ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வருவதால், அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தற்போது விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மையத்துக்கு கூடுதல் விடைத்தாள்கள் வரும் பட்சத்தில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில், 3 மையங்களில் கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வந்த பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி, நேற்றுடன் முடிவடைந்து விட்டது. தற்போது 3 மையங்களிலும் பிளஸ்1 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24ம் தேதி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,SSLC ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...