×

166 ஆண்டுகள் பழமையான அவ்வையார் அரசு பள்ளி தகைசால் பள்ளியாக தேர்வு

தர்மபுரி, ஏப்.22: தர்மபுரியில் கடந்த 166 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பழமையான அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தகைசால் பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மேம்பாட்டிற்காக, தமிழ்நாடு அரசு ₹15 கோடியை ஒதுக்கியுள்ளது. தர்மபுரி மாவட்டம், கல்வி கற்பதில் பின்தங்கியிருந்தாலும், 1857ம் ஆண்டு அவ்வையார் பள்ளி தெலுங்கு துவக்க பள்ளியாக துவங்கப்பட்டது. பின்னர், 1884ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 1917ல் உயர்நிலைப்பள்ளியாக மாறியது. தொடர்ந்து 1920ம் ஆண்டில் 10ம் வகுப்பு துவங்கப்பட்டது. இருபாலர் பள்ளியாக இருந்து வந்த அவ்வையார் பள்ளி, 1978ம் ஆண்டு பெண்கள் அரசு பள்ளியாக மாற்றப்பட்டது. தர்மபுரி நகரில் பெரும்பாலான மாணவிகள், அவ்வையார் பள்ளியில் தான், தங்களது கல்வியை கற்று வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை 3500 மாணவிகள் படிக்கின்றனர். மிகவும் பழமையான இப்பள்ளிக்கு சான்றாக, தலைமையாசிரியர் அலுவலக கட்டிடம் 63 ஆண்டுகளாகியும் உறுதியுடன் உள்ளது. இப்பள்ளியின் நுழைவு வாயில் பகுதியில் அவ்வையார் சிலை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 7.5.2022 அன்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூறுகையில், ‘நான் டெல்லிக்கு சென்றிருந்த போது, அங்குள்ள அரசு பள்ளிகளுக்கு சென்றிருந்தேன். அங்குள்ள தகைசால் பள்ளிகள் குறித்து எனக்கு விளக்கினர். நாமும் தமிழ்நாட்டில் இதுபோல் அரசு பள்ளிகளை உருவாக்க வேண்டும் என உறுதி கொண்டேன். அதனடிப்படையில், தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் அமைக்கப்படும்,’ என்றார். இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் மாவட்டத்தில் குகை முனிசிபல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, ஊட்டி, கோயமுத்தூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் என 28 மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி வீதம் தேர்வு செய்யப்பட்டு தகைசால் பள்ளியாக மாற்ற ₹171 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் பள்ளி வகுப்பறைகள், கம்ப்யூட்டர் லேப், தலைமையாசிரியர் அறை, கழிவறைகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.

இதுபற்றி பள்ளி தலைமையாசிரியர் தெரசாள் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லிக்கு சென்ற போது, அங்குள்ள பள்ளிகளை பார்வையிட்டு, அதே போல் நம் தமிழ்நாட்டிலும் பள்ளிகள் மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாக அதிக மாணவிகளை கொண்ட பள்ளி, மாதிரி பள்ளி மற்றும் மாவட்ட, மாநில அளவில் கல்வி மற்றும் இதர போட்டிகளில் சாதனை படைத்த பள்ளி என 28 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தகைசால் பள்ளி அதாவது ஸ்கூல் ஆப் எக்சலன்சி என தேர்வு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நமது அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, ₹15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளி தேர்வானதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும், பள்ளி கல்வித்துறை நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதையொட்டி கடந்த 17 மற்றும் 18ம் தேதியில் 28 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிதியின் மூலம், பள்ளிக்கு 20 புதிய வகுப்பறைகள், புதிய கழிவறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கலையரங்கம், தலைமையாசிரியர் அறை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. மேலும் நவீன ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. இதன் மூலம் மாணவிகளின் கல்வி தரம் உயர்வதோடு, அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் இங்கு சேர்ந்து கல்வி கற்க இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 166 ஆண்டுகள் பழமையான அவ்வையார் அரசு பள்ளி தகைசால் பள்ளியாக தேர்வு appeared first on Dinakaran.

Tags : Avvaiyar Government School ,Thakaisal School ,Dharmapuri ,Avvaiyar Government Girls High School ,
× RELATED ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட...