×

71 வயதில் உலகம் சுற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தம்பதிகள் தஞ்சாவூர் பெரியகோயிலை கண்டு வியந்தனர்

 

தஞ்சாவூர், ஏப்.22: உலகம் சுற்றும் வாலிபன் என்கிற திரைப்படத்தில் எம்ஜிஆர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல் காட்சி அமைந்திருக்கும். அதை அப்படியே உண்மையாகும் விதமாக ஜெர்மனியைச் சேர்ந்த முனைவர்.ஹூல்ஸ்சர் (Dr.hoelscher) என்பவர் தனது மனைவி ஐரின் ருனேலர் உடன்(Dr.Irene Ruengeler) வீட்டை போல் உருவாக்கிய உயர் ரக காரில் பல்வேறு நாடுகளில் வலம் வருகிறார். பொதுவாகவே மேலை நாட்டவர்கள் குறிப்பிட்ட காலம் வரை உழைத்து பணம் சேர்த்த பிறகு அதில் பெரும் தொகையினை சுற்றுலா செல்வதற்காக செலவு செய்வார்கள். அப்படித்தான் இந்த ஜெர்மனி தம்பதியினரும் கடந்த 2018ம் ஆண்டு துவங்கி உள்ளனர்.

ஜெர்மனியில் இருந்து பின்லாந்து, துருக்கி, ஈரான், கஜகஸ்தான், மங்கோலியா, சைனா என 20 நாடுகளை கடந்து தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளனர். இவர்கள் செல்லும் இடங்களில் விடுதியில் தங்குவதில்லை. அவர்கள் கொண்டு வந்துள்ள சொகுசு வாகனத்திலேயே அனைத்து வசதிகளும் உள்ளது. உறங்க, உணவு சமைக்க என அனைத்து வசதிகளும் அந்த வாகனத்தில் இருக்கிறது. சுமார் 5 ஆண்டுகளாக அதே வாகனத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை வந்த ஜெர்மானிய தம்பதியினர் பெரியகோயிலை சுற்றி பார்த்துவிட்டு அங்கு நடந்த கலை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்து உள்ளனர். அப்போது முனைவர்.ஹூல்ஸ்சர் கூறியதாவது

2018ல் எனது மனைவியுடன் தொடங்கி இந்த சுற்றுலா பயணம் சுமார் ஐந்து ஆண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு அடுத்ததாக இந்தோனேசியா ஆஸ்திரேலியா செல்ல உள்ளோம். மேலும் இந்தியாவில் மூன்று மாதங்களாக தங்கி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வந்தோம். இந்தியா ஒரு நல்ல நாடு. கோடை காலம் என்பதால் மிகுந்த வெப்பமாக உள்ளது. தஞ்சை பெரிய கோயில் எங்களுக்கு வியப்பளிக்கிறது என்றார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததாகவும் தமிழ் கலாச்சாரம் மிகவும் அருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

The post 71 வயதில் உலகம் சுற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தம்பதிகள் தஞ்சாவூர் பெரியகோயிலை கண்டு வியந்தனர் appeared first on Dinakaran.

Tags : Germany ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...