×

பாடாலூர் அருகே ஆதனூர் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

 

பாடாலூர், ஏப்.22: பாடாலூர் அருகே ஆதனூர் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கினர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமையாசிரியர் முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.

பள்ளியில் செயல்படும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மன்றத்தின் பொறுப்பு ஆசிரியர் மீனா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் முத்துசாமி கலந்து கொண்டு கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்னைகள் பற்றி மாணவரிடம் எடுத்துரைத்தார்.

மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பள்ளியில் தொடங்கி பள்ளி மாணவ, மாணவியர்கள் போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கியும், பதாகை ஏந்தியவாறு முக்கிய வீதியின் வழியாக சென்று தொடங்கிய இடத்தில் பேரணி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆசிரியர் தனராசு வரவேற்றார். நிறைவாக, பள்ளி ஆசிரியர் அசோகன் நன்றி கூறினார்.

The post பாடாலூர் அருகே ஆதனூர் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Adanur Government School ,Patalore ,Batalore ,eradication ,Adanur ,Government School ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்...