×

சாதாரண மக்கள் பயன்படுத்தும் முத்திரைத்தாள் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை: முத்திரைத்தீர்வை விலை அதிகரிக்கப்பட்டது என்பது தவறு; பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்

சட்டப்பேரவையில் நேற்று 2023ம் ஆண்டு இந்திய முத்திரை சட்டத்திருத்த முன் வடிவு சட்டத்தை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வுக்காக தாக்கல் செய்தார். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் நாகை மாலி, காங்கிரஸ் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் முத்திரைத்தீர்வை விலையை குறைக்க கோரிக்கை வைத்தனர். இதற்கு அமைச்சர் மூர்த்தி பதில் அளித்து பேசியதாவது: முத்திரை சட்டத்தில் உள்ள 65 வகையான ஆவணங்களில் வங்கிகள், நிறுவனங்கள் போன்றவை பயன்படுத்தும் 15 வகையான ஆவணங்களுக்கு மட்டுமே முத்திரை தீர்வை விகிதம் மாற்றியமைக்கப்படுகிறது. சாதாரண பொதுமக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆவணங்களுக்கான முத்திரைத்தீர்வை விகிதம் இந்த திருத்த சட்டத்தின் மூலம் மாற்றியமைக்கப்படவில்லை. இதனால் சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முத்திரை சட்டத்தில், 38 வகையான ஆவணங்களின் முத்திரை தீர்வையை அதிகரிக்க முன்மொழிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திருத்த சட்டத்தின் மூலம் 15 வகையான ஆவணங்களுக்கு மட்டுமே முத்திரை தீர்வை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொது அதிகார ஆவணத்திற்கு சொத்து மதிப்பில் 2% என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அது ஒரு சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிணைய ஆவணத்திற்கு ஒரு சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.500 என குறைக்கப்பட்டுள்ளது. ரத்து ஆவணம் மற்றும் ஏற்பாடு ரத்து ஆவணங்களுக்கு அசல் ஆவணத்திற்கான முத்திரை தீர்வையே நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அவை குறைக்கப்பட்டு முறையே ரூ.1000 மற்றும் ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ரத்து ஆவணம், சான்றிட்ட நகல், நோட்டரி முத்திரை வில்லை, கூட்டு பங்காண்மை நிறுவனம் பதிவு ஆகியவற்றிற்கு முந்தைய அரசால் 2013ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட முத்திரை தீர்வையே தற்போதும் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.

உறுதிமொழி மற்றும் உடன்படிக்கை ஆவணத்திற்கு முந்தைய அரசால் 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு 200 ரூபாயும், பிரதி கட்டணம் மற்றும் அடமான மறு கிரய ஆவணத்திற்கு 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அவற்றிற்கு முறையே 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் எனவும், அறக்கட்டளை ஆவணத்திற்கு 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள மதிப்பிற்கு 4 சதவிகிதம் அதிகபட்சம் 1000 ரூபாய் எனவும் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே, முத்திரை தீர்வையை தற்போது கழக அரசு தான் உயர்த்தியுள்ளது என்பது தவறான ஒன்றாகும். முந்தைய ஆட்சியில் 2013ம் ஆண்டில் முத்திரை தீர்வை உயர்த்த முன்மொழிவு செய்யப்பட்டதில் சில வகை ஆவணங்களுக்கு மட்டுமே தற்போது முத்திரை தீர்வையை உயர்த்தி முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்ட மசோதா நிறைவேறியது.

The post சாதாரண மக்கள் பயன்படுத்தும் முத்திரைத்தாள் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை: முத்திரைத்தீர்வை விலை அதிகரிக்கப்பட்டது என்பது தவறு; பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister Murthy Information ,Legislative Assembly ,Minister of Commercial Taxes and ,Registration ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில்...