×

சிறுவாணி அணை விவகாரத்தில் தமிழ்நாடு-கேரள அதிகாரிகளுடன் கள ஆய்வு செய்து நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சிறுவாணி அணையின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணி 90% நிறைவடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் “தடுப்பணை கட்டுவதாக செய்தி வந்தவுடன் அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். அணை கட்டுவது உண்மையானால் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “இது கோவை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதார பிரச்னை. அணை கட்டுவதை தடுத்க்க வேண்டும். கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “இந்த செய்தி எங்களுக்கும் வந்துள்ளது. கேரளா அரசு 70 மில்லியன் வரை நீரை தேக்கும் அளவுக்கு அணை கட்டியிருப்பதாக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு, கேரள மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேவை என்றால் நானே சென்று பேச்சுவார்த்தை நடத்துவேன்” என்றார்.

* பேரவையில் மசோதா நிறைவேறியது நீர்நிலைகளை பாதுகாக்க புதிய சட்டம் அறிமுகம்
வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்ட மசோதா ஒன்றை நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டம், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களான) சட்டம்-2023 என்று அழைக்கப்படும். நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை இயற்கை நிகழ்வுகளால் தனது பரப்பை விரிவாக்கிக் கொண்டு போக்கை மாற்றிக் கொள்கின்றன. இவை பொதுநலன் கருதி பாதுகாக்கப்பட வேண்டும். தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொண்டால், அந்த நிலத்திற்கான அரசின் முடிவின்படி, வருவாய் வாரியத்தின் நிலையாணை அடிப்படையில் அதை வழங்க வேண்டும். இந்த நில பரிமாற்ற முறையை சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்துவதற்கும், நீர்நிலையை பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையை முறைப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க இந்த சட்டம் இயற்றப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

The post சிறுவாணி அணை விவகாரத்தில் தமிழ்நாடு-கேரள அதிகாரிகளுடன் கள ஆய்வு செய்து நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Siruvani dam ,Minister ,Duraimurugan ,SP Velumani ,Legislative Assembly ,Kerala government ,
× RELATED பஸ்சில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது