×

நெல்கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு ரூ.80 லஞ்சம் கேட்டு மிரட்டல்: பெண் விவசாயி கலெக்டரிடம் புகார்

செங்கல்பட்டு. ஏப். 22:செங்கல்பட்டு அருகே, அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் செய்ய, ஒரு மூட்டைக்கு ரூ.80 லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக கலெக்டரிடம் பெண் விவசாயி புகார் அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்துக்குட்பட்ட கரும்பாக்கம் ராயல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுணா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவடை செய்த நெல் மூட்டைகளை கரும்பாக்கம் பகுதியில் உள்ள தமிழக அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது, நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த இருவர் பெண் விவசாயியான சுகுணாவிடம் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமானால் லஞ்சமாக மூட்டைக்கு ரூ.70 முதல் ரூ.80 கொடுத்தாக வேண்டும்.

இல்லையென்றால், உங்கள் நெல்லை கொள்முதல் செய்யமுடியாது என மிரட்டியதாக கூறினார். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் முகமை வளாக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட சுகுணா, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் கரும்பாக்கம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெற்று வரும் முறைகேடு குறித்து சரமாரி கேள்விகளைக் கேட்டு புகார் மனு அளித்தார். இதனால், கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

The post நெல்கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு ரூ.80 லஞ்சம் கேட்டு மிரட்டல்: பெண் விவசாயி கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : brinkalputtu ,Government Paddy Purchase Station ,Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...