×

தொழிலாளரின் அடிப்படை உரிமையை பறிக்கும் முயற்சி அரசுக்கு கிடையாது: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் விளக்கம்

சென்னை: தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை எந்த காலத்திலும் பறிக்கும் முயற்சி இந்த அரசிற்கு கிடையாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் நேற்று சட்டப்பேரவைக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அமைச்சர் சி.வி.கணேசன்: நடைமுறையில் உள்ள வாராந்திர மற்றும் தினசரி வேலை நேரம், வரம்புமுறைகள், ஓய்வு, இடைவேளை, மிகை நேரம் அதாவது கூடுதல் நேரம், பணிக்கால சம்பளம், வாராந்திர விடுமுறை குறித்த எந்த மாற்றமும் தொடர்ந்து நடைமுறையில் நீடிக்கும்.

தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த சட்டதிருத்தம் நடைமுறைப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு விருப்பம் இல்லை என்றால், நிச்சயமாக அரசு பரிசீலனை செய்து ஆய்வு செய்து தான் நடைமுறைப்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வாரத்தில் 48 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னொன்று, எல்லா நிறுவனங்களுக்கும் இந்த சட்டத்திருத்தம் பொருந்தாது. எந்த நிறுவனம், எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ அந்த தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இது பொருந்தும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் இங்கே நம்முடைய வேலை நேரங்களிலே குறிப்பிட்ட ஒரு நெகிவுழ்த்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது, எல்லா நிறுவனங்களுக்கும் இது பொருத்தமானது அல்ல. மின்னணுவியல் துறையில் இருக்கக்கூடிய நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரிஸ். தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யக்கூடிய தொழில், மென்பொருள்தொழில் சாஃப்ட்வேரில் இருக்கக்கூடியவர்கள் என்று இப்படிப்பட்ட துறைகளில் வரக்கூடியவர்கள், அவர்கள் வேலை பார்க்கக்கூடிய சூழலுக்கு ஏற்ற வகையில் அங்கே வேலை பார்க்கக் கூடியவர்கள் அவர்களாக விரும்பினால் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இதனால் வாரத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த வேலை நாட்கள் என்பது மாறாது, வேலை மணி நேரங்கள் மாறாது. எனவே அவர்கள் நான்கு நாட்கள் வேலை செய்துவிட்டு மூன்று நாட்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் அல்லது வேறு பணிகளை அவர்கள் பார்க்கலாம். 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்தால் 3 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும். கட்டாயப்படுத்தி வேலைக்கு வர சொன்னால் என்ன நடைமுறை பின்பற்றப்படுமோ, அந்த நடைமுறைகள் பின்பற்றப்படும். மீண்டும் சொல்கிறேன், தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமையை எந்த காலத்திலும் பறிக்கக்கூடிய எந்த முயற்சியும் இந்த அரசிற்கு கிடையாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தொழிலாளரின் அடிப்படை உரிமையை பறிக்கும் முயற்சி அரசுக்கு கிடையாது: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Govt ,Ministers Thangam ,Southern State ,CV ,Ganesan ,Chennai ,Minister ,Thangam Tennarasa ,Ministers ,
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...