×

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பெரம்பூர்: சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரிமுனையில் திமுக சார்பில் ரமலான் பெருநாள் விழா நேற்று நடந்தது. அமைச்சர் சேகர்பாபு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 2 ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், தயாநிதி மாறன் எம்பி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், சென்னை மாநகர மேயர் பிரியா, பேராசிரியர் அப்துல் காதர் உள்ளிட்டோரும், திமுக நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களும் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

எனது தொகுதியில், என் சார்பில் 20 ஆயிரம் இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது உள்பட தொடர்ந்து, ரமலான் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். வருடம் முழுவதும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். எப்போதுமே மக்களுடன் இருக்கும் இயக்கம் திமுக. குறிப்பாக, இஸ்லாமிய மக்களுடன் நெருக்கமாக இருக்கும் இயக்கம். கண்ணியமிக்க காயிதே மில்லத் காலத்தில் இருந்து, திமுக எப்போதுமே இஸ்லாமிய மக்களுக்கு துணையாக நின்று கொண்டு இருக்கிறது. இஸ்லாமிய மக்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது திமுகதான். அதனால் கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்ற பாராட்டை முதலமைச்சர் பெற்றுள்ளார்.

ஒரே நாடு, ஒரே மொழி உள்ளிட்ட ஒற்றை அடையாளத்திற்குள் நம்மையெல்லாம் அடைக்க நினைக்கும் பாசிச சக்திகளை வரும் 2024 தேர்தலில் அடியோடு விரட்டி அடிப்போம். நான் பல நேரங்களில் கைதாகி இருந்தாலும், இஸ்லாமியர்களுக்கு எதிரான சிஏஏ சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது கைதானதுதான் முதல் கைது. அதை பெருமைக்குரியதாக பார்க்கிறேன். கலைஞர் ஆட்சியில் இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. தற்போது நடைபெறும் திமுக ஆட்சியிலும் செய்யப்படுகிறது. சிறுபான்மையினர் நலனில் அக்கறை காட்டாத அரசு கடந்த காலத்தின் அதிமுக அரசுதான்.

அதனால் தான் சிறுபான்மையினர் நல வாரியத்தை செயல்பாட்டில் வைக்காமல் இருந்தது. ஆனால் முதலமைச்சர் அந்த ஆணையத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து செயல்பட வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் துறைமுகம் பகுதி திமுக செயலாளர்கள் முரளி, ராஜசேகர், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, கவுன்சிலர் பரிமளம், வட்ட செயலாளர்கள் பார்த்திபன், கவியரசு, பரத் உள்ளிட்ட இஸ்லாமிய மக்கள், திமுகவினர் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.

The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Ramzan festival ,Minister ,Udayanidhi Stalin ,Perambur ,Ramadhan ,DMK ,Barimuna ,Chennai Harbor ,Muslims ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...